
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ படம் ஜூன் 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று இதன் ட்ரெய்லர் வெளியாகி கவனம் பெற்றுவருகிறது. கபாலியில் மலேசியத் தமிழர்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருந்த ரஞ்சித், இந்த முறை மும்பை - தாராவிப் பகுதியில் உள்ள தமிழர்களின் பிரச்சினையைக் கையில் எடுத்துள்ளார். மேலும், இந்தப்படத்தில் மக்கள் தலைவனாக வலம் வருகிறாராம்.
இந்த ட்ரெய்லரில் அரசியல் வசனங்கள் அனல் தெறிக்கின்றன... “சேரியில் உள்ள அழுக்கைத் துடைத்து வெளிச்சமாக்கப் போகிறேன்” என வசனம் பேசி குடிசைகளைக் கொளுத்தும் வில்லனாக நானா படேகர் மிரட்டுகிறார். அதைபோலவே ரஜினி “இந்த உடம்புதான் நமக்கு இருக்குற ஒரே ஆயுதம். இதை உலகத்துக்கே தெரியப்படுத்துவோம்.. கூட்டுங்கடா மக்களை...” என்று மக்களை ஒன்று திரட்டும் போதும், “நிலம் உனக்கு அதிகாரம்... நிலம் எங்களுக்கு வாழ்க்கை...” என்று வில்லனுக்கு முன் பேசும்போதும் ரஜினி. மும்பை தாராவியில் வாழும் தமிழர்களின் தலைவனாக தோன்றுவது தெரிகிறது.
இந்த ட்ரெய்லர் வெளியான அதேநேரம் ரஜினி ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தது தொடர்பாக அவர் பேசியுள்ள ஆடியோ பதிவில், “மக்கள் உயிர் குடிக்கும் இத்தகையப் போராட்டங்கள் தொடரக் கூடாது” எனக் கூறியுள்ளார். துப்பாக்கிச் சூடு கூடாது எனப் பலரும் பேசிவரும்போது போராட்டம் கூடாது என ரஜினி கூறியிருப்பது, அநீதிக்கு எதிராக ஒன்றுகூட வேண்டும் என திரையில் பேசிய காலாவுக்கு முற்றிலும் முரணான தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல வருடங்களாக தமிழ் சினிமா தள்ளி வைத்திருந்த அரசியலை ரஞ்சித் படங்கள் பேசியதால் கவனம் ஈர்த்திருக்கிறார். தமிழ் சினிமாவில் ரஜினி என்ற மிகப்பெரிய ஆளுமையைத் தாண்டி ரஞ்சித் வெளியே தெரிவது, கவனம் ஈர்ப்பது சாதாரணமானது அல்ல. ரஜினியின் பிரபலத்தை வைத்து தான் பேச நினைக்கும் கருத்தை பதிவிட்டார் ரஞ்சித். அதனை அறிந்த பின் அடுத்த பட வாய்பையும் வழங்கி ரஞ்சித்தின் அரசியலை தனக்கு சாதகமாக்கிகொண்டுள்ளார் ரஜினி.
அரசியலுக்கு அடித்தளம் போட்டுள்ள ரஜினி, ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடந்த போராட்டத்தில், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். கொடூரமாக தாக்கப்பட்ட இந்த சம்பவத்தால் தமிழகமே குலுங்கியது. இந்த நேரத்தில் காலா படத்தில் டிரெய்லரை வெளியிட்டு தன்னை ஒரு மக்கள் தலைவன் என தோற்றத்தை உருவாக்கிக் கொள்கிறார். இந்த பில்டப் எல்லாம் சினிமாவில் மட்டும்தானா? என என சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.