மீண்டும் சீனாவை கழற்றிவிட்டது நேபாளம்..?? நவம்பர்-4 ஆம் தேதி காத்மாண்ட் விரைகிறார் இந்திய ராணுவ தளபதி நரவானே.

By Ezhilarasan BabuFirst Published Oct 29, 2020, 4:19 PM IST
Highlights

மூன்று நாட்கள் அவர் அங்கு தங்கி இருப்பார் எனவும் அப்போது அந்நாட்டின் ஜனாதிபதி இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி நரவானேவுக்கு கௌரவ ஜெனரல் பட்டம் வழங்க உள்ளார்

சீனாவுடன் கைகோர்த்துக்கொண்டு  இந்தியாவுடன் நேபாளம் எல்லை தகராறில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்திய ராணுவத் தலைவர் ஜெனரல் நர்வானே  வரும் நவம்பர் 4-ஆம் தேதி நேபாள நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கடந்த வாரம் ரா அமைப்பின்  தலைவர் கோயல் காத்மாண்டு சென்றிருந்த நிலையில் நர்வானே சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 5 மாதங்களுக்கு மேலாக எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. இந்தியா தனது சாமர்த்தியத்தால் அதை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆசிய கண்டத்தில் இந்தியாவை தனிமைப்படுத்தும் முயற்சிகளில் சீனா தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே இந்தியாவுக்கு பகைநாடாக உள்ள பாகிஸ்தானை தன்னுடன் சேர்த்துக் கொண்டுள்ள சீனா இந்தியாவுக்கு நெருக்கமாக இருந்த நேபாளத்தையும் இந்தியாவுக்கு எதிரான செயல்பட வைத்து சீனா சதி செய்து வருகிறது. 

அதன் எதிரொலியாக இந்தியாவுக்கு சொந்தமான லிபுலேக், லிம்பிய தூரா, கலபானி உள்ளிட்ட  பகுதிகள் நேபாள நாட்டிற்கு சொந்தமாக பகுதிகள் என கூறி மூன்று பகுதிகளையும் எல்லைக்குள் இணைத்து  புதிய வரைபடம் ஒன்றை நேபாளம் வெளியிட்டுள்ளது. நேபாள நாட்டு பிரதமர் ஷர்மா ஓலி சீனாவை திருப்திப்படுத்தும் நோக்கில் இவ்வாறு நடந்து கொள்வதாகவும் உடனே தன்னுடையை நிலைபாட்டை மாற்றிக் கொள்ள வேண்டுமெனவும் நேபாளத்தை இந்தியா எச்சரித்துள்ளது. இவ்வாறு இந்தியாவுக்கும் நேபாளத்துக்கு மிடையே  தகராறு இருந்து வரும் நிலையில் இந்திய சுதந்திர தினத்திற்கு நேபாள பிரதமர் சர்மா ஓலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  நேபாளத்தின் நடவடிக்கையில் சற்று  மாற்றம் தென்பட தொடங்கியுள்ள நிலையில் நேபாள ராணுவ தலைவர் தலைமை ஜெனரல் பூர்ண சந்திரா தாபாவின்  அழைப்பின் பேரில் இந்திய ராணுவ தலைமை ஜெனரல் மனோஜ்  முகுந்த் நரவானே வரும் நவம்பர் 4 தேதி நேபாளத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். 

மூன்று நாட்கள் அவர் அங்கு தங்கி இருப்பார் எனவும் அப்போது அந்நாட்டின் ஜனாதிபதி இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி நரவானேவுக்கு கௌரவ ஜெனரல் பட்டம் வழங்க உள்ளார். 4ஆம் தேதி காத்மாண்டு செல்லும் அவரை நேபாள ராணுவ தலைமை ஜெனரல் பூர்ண சந்திரா தாபா வரவேற்க உள்ளார். அதைத்தொடர்ந்து அவர் நேபாளத்தின் பிரதமர் மற்றும் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சரை சந்திக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதில் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லை தகராறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என  தெரிகிறது. ரா அமைப்பின் தலைவர் சம்பத் குமார் கோயல் கடந்த வாரம் திடீரென காட்மாண்டு விரைந்திருந்த நிலையில் தற்போது நரவானே இந்த பயணத்தை மேற்கொள்கிறார்.  இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிரதிநிதியாக கோயல் நேபாளத்திற்கு விஜயம் செய்ததாக நேபாள அரசும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது. 

சீனாவுடன் நேபாளம் நெருக்கங் காட்டி வந்த நிலையில் தற்போது மீண்டும் அது இந்தியாவுடன் நெருக்கம் கட்ட தொடங்கியிருப்பது சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் அண்டை நாடான நேபாளத்தை பகைத்துக் கொள்ளக் கூடாது எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜக அரசை எச்சரித்து வந்த நிலையில் தற்போது  நேபாளத்துடன் சுமுகமான உறவையே இந்தியா விரும்புகிறது என்பதற்கான உதாரணமாகவே நரவானேவின் இந்த பயணம் அமையவுள்ளது. அதேபோல் இந்தியாவை என்றும் பகைத்துக் கொள்ளக்கூடாது என நேபாள நாட்டு பிரதமருக்கு எதிராக அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் எதிர்த்து வந்த நிலையில் நேபாளம் இந்தியாவுடன்  மீண்டும் பழைய நெருக்கத்தை காட்ட முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது.
 

click me!