8 மாதங்கள் பொறுத்திருங்கள்... திமுக ஆட்சியில் நீட் ரத்தாகும்... மு.க. ஸ்டாலின் பிரமாண்ட உறுதி..!

By Asianet TamilFirst Published Sep 13, 2020, 8:54 AM IST
Highlights

இன்னும் 8 மாதங்களில் திமுக ஆட்சி தமிழகத்தில் அமையும்போது நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 கடந்த 4 நாட்களில் மட்டும் தமிழகத்தில் நீட் தேர்வால் 3 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அரியலூர் அனிதா தொடங்கி ஜோதிஸ்ரீ துர்கா வரை, அஞ்சலி செலுத்துவதோடு எல்லாமும் முடிந்துவிடுகிறதா? அவர்கள் நம் வீட்டுக் குழந்தைகள் இல்லையா?  பயமா இருக்கு.. என எழுதி வைத்து இறந்திருக்கிறார் ஜோதிஸ்ரீ துர்கா. அடக்குமுறைகளையும் அநீதிகளையும் எதிர்த்து திமிறி எழுந்த இனம் நம் தமிழ் இனம். அந்தக் குணம் மாணவர்களுக்கும் அவசியம். போராடினால்தான் வெற்றி என்றால் போராடுவோம். எதிர்த்தால்தான் கதவு திறக்கும் என்றால் எதிர்த்து நிற்போம்.


தைரியமாக இருங்கள். உங்களுக்காகப் போராட நாங்கள் இருக்கிறோம். திமுக இருக்கிறது; நான் இருக்கிறேன்! திமுக ஆட்சி அமையும்போது ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும். நீட் தேர்வினால் வாய்ப்பை இழந்தவர்களுக்கு, பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். எந்தவிதமாக சட்டப்போராட்டத்தையும் ஆட்சிப் போராட்டத்தையும் திமுக அரசு மேற்கொள்ளும். இது உறுதி. எட்டு மாதங்கள் பொறுத்திருங்கள்; கலங்காதிருங்கள். விடியல் பிறக்கும்!” என்று அறிக்கையில் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 

click me!