நீட் தேர்வு..! காலை வாரிய திமுக அரசு..! கைவிரித்த மா.சு..! கொதியாய் கொதிக்கும் பிளஸ் 2 மாணவர்கள்..!

By Selva KathirFirst Published Jun 19, 2021, 9:23 AM IST
Highlights

தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த சில நாட்களிலேயே நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து அறிய ஒரு குழுவை அமைத்தது திமுக அரசு. இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்

திமுக ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் தொடங்கி உதயநிதி வரை பிரச்சாரம் செய்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததால் இந்த ஆண்டு நீட் தேர்வு இருக்காது என்று நம்பிக் கொண்டிருந்த பிளஸ் 2 மாணவர்கள், மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியால் கொதியாய் கொதித்துப் போயுள்ளனர்.

தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த சில நாட்களிலேயே நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து அறிய ஒரு குழுவை அமைத்தது திமுக அரசு. இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இது தவிர டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த போது தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்து திரும்பியிருந்தார். ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் திமுக அரசு தெளிவான நிலைப்பாட்டை எடுக்காமல் இருந்தது.

அதாவது இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? என்பது தான் அந்த குழப்பம். ஏனென்றால் திமுக ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி போன்றோர் செல்லும் இடங்களில் எல்லாம் வாக்குறுதி அளித்து வந்தனர். அதன்படி திமுக ஆட்சிக்கு வந்ததால் நீட் தேர்வு நடைபெறாது என்று மாணவர்களும், பெற்றோர்களும் நம்பிக் கொண்டிருந்தனர். அதே சமயம் நீட் தேர்வு ரத்து தொடர்பாக எவ்வித அறிவிப்பும் வரவில்லை. மாறாக நீட் தேர்வின் தாக்கத்தை மதிப்பீடு செய்ய திமுக அரசு ஒரு குழுவை அமைத்தது. நீட் தேர்வை ரத்து செய்யப்போவதாக கூறிய திமுக அரசு, தற்போது தான் அதன் தாக்கத்தையே அறிந்து கொள்ளப்போகிறதா? என்று பெற்றோர்கள் குழப்பம் அடைந்தனர்.

ஏனென்றால் நீட் தேர்வால் கிராமப்புற ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களால் மருத்துவ படிப்பு கனவை அடைய முடியவில்லை என்று கூறித்தான் திமுக பிரச்சாரம் செய்து வந்தது. அப்படி இருக்கையில் இன்னும் என்ன நீட் தேர்வின் தாக்கத்தை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது? அதற்கு எதற்கு ஒரு குழு? என்றெல்லாம் பெற்றோர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்தன. சரி, எது எப்படி இருந்தாலும் கொடுத்த வாக்குறுதியை திமுக காப்பாற்றும், இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறாது என்று அவர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் அது குறித்து திமுக அரசு மவுனம் காத்து வந்ததால் தங்கள் பிள்ளைகளின் மருத்துவ கனவை எண்ணி பெற்றோர் சிலர் வருத்தம் அடைந்தனர்.

இந்த நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்பு தொடர்ந்து நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருந்தார். இதனை கேட்டு பெற்றோர்கள் பலர் அதிர்ந்து போயினர். ஏனென்றால் நீட் தேர்வை ரத்து செய்யப்போவதாக கூறிய திமுக, தற்போது ஏன் அதற்கான பயிற்சி வகுப்பை நடத்த வேண்டும் என்பது தான் அதற்கு காரணம். நீட் தேர்வே இருக்காது என்றால் எதற்கு திமுக அரசு நீட் பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும் என்று அதிர்ச்சி ஆகினர். ஆனால் அதன் பிறகும் கூட தமிழக அரசு தரப்பில் இருந்து நீட் தேர்வு குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் ஓபிஎஸ் தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? என்று கேள்வி கேட்டு காட்டமாக ஒரு அறிக்கை வெளியிட்டார்.

இந்த அறிக்கைக்கு பதில் அளிக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தான் தற்போது வரை தமிழகத்தி நீட் தேர்வு நடைமுறையில் உள்ளது. நீட் தேர்விற்கு தயாராக வேண்டியது மாணவர்களின் கடமை, தமிழக அரசு சார்பில் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடரும் என்றார். அவர் வெளிப்படையாக இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறும் என்று கூறவில்லை. ஆனால் அவர் கூறியதன் மறைமுக பொருள் இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறும் என்பது தான். இதனை அறிந்த பிளஸ் 2 மாணவர்களின் பெற்றோர்கள் கொதியாய் கொதித்து போயுள்ளனர். நீட் தேர்வு ரத்து என்று வாக்குறுதி அளித்த காரணத்தினால் தானே திமுகவிற்கு வாக்களித்தோம், ஆனால் வாக்குறுதிக்கு மாறாக நீட் தேர்வு நடைபெறும் என்று அமைச்சரே கூறுகிறார் என்று நொந்து கொண்டு பிள்ளைகளை அந்த தேர்விற்கு தயாராக்கி வருகின்றனர்.

click me!