நீட் , 7பேர் விடுதலை தீர்மானங்கள் ராஜ்பவன் ஊறுகாய் ஜாடியில் ஊறிக்கொண்டு இருக்கிறது.. கி.வீரமணி ஆவேசம்.

By Ezhilarasan BabuFirst Published Dec 24, 2021, 10:50 AM IST
Highlights

நீட் தீர்மானம்,7பேர் விடுதலை உள்ளிட்ட தமிழக அரசின் தீர்மானங்களை  ராஜ்பவனில் உள்ள ஊறுகாய் ஜாடியில் ஊறிக்கொண்டு இருக்கிறது. இதை விட அரசியல் சட்டத்தை கொச்சை படுத்துபவர்கள் யார். 

நீட் தீர்மானம் 7பேர் விடுதலை உள்ளிட்ட தமிழக அரசின் தீர்மானங்கள் ராஜ்பவனில் உள்ள ஊறுகாய் ஜாடியில் ஊறிக்கொண்டு இருக்கிறது என கீ.வீரமணி விமர்சித்துள்ளார். தந்தை பெரியாரின் 48வது நினைவு நாள் கருத்தரங்கம் மற்றும் நூல்வெளியீடு நிகழ்ச்சி சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திராவிட கழகம் தலைவர் கீ.வீரமணி, நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,சட்டமன்ற உறுப்பினர் ஆளுர்ஷாநவாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

ஆளுர்ஷாநவாஸ் மேடை பேச்சு: 7மாதத்தில் 7ஆணைகள் பிறப்பித்துள்ளார் நம் முதல்வர். எல்லா முதல்வராலும் இவ்வாறு செய்ய முடியுமா என்று நிச்சயம் முடியாது ஏனென்றால் நம் முதல்வர் பெரியாரின் கருத்துகளை உள்வாங்கியதால் தான். கடந்த பத்து ஆண்டுகால ஆட்சியில் செய்யமுடியாத பல திட்டங்களை 7மாதத்தில் செய்து முடித்துள்ளார் நம் முதல்வர். சில தீய சக்திகள் பெரியாரின் சிலை மீது கல்வீச்சு, செருப்புகளை வீசுகிறார்கள் ஆனால் எங்களுக்கு செருப்புகளை எரிய தெரியாது செருப்பில்லா கால்களுக்கு செருப்பை அணியவைக்க தான் தெரியும் என்றார். 

பழனிவேல் தியாகராஜன் மேடை பேச்சு: 

ஒருவரின் மறைவுக்கு பிறகு தான் ஒரு மனிதனின் முழு அடையாளம் வெளி வரும் அதற்கு எடுத்து காட்டு என் தந்தையின் மரணம். தமிழ்நாட்டின் நிதி நிலைகள் நாங்கள் ஆட்சியில் இருந்து செல்லும் பொழுது சரியாக இருக்க வேண்டும் அதுதான் எங்களுக்கு முதல் வெற்றி. Gst குழு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்படும் என்ற வார்த்தை கிடையாது. ஒன்றிய அரசிற்கு ஏற்றவாறு தான் அனைத்தும் இருக்கும்.10ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கலாச்சாரங்கள் என்னை மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி விட்டது. அமைச்சர்கள் வரும் பொழுது பணியாளர்கள் குனிந்து நெளிஞ்சு வணக்கம் சொல்வது எனக்கு வருத்தமாக இருந்தது.அந்த பழக்கம் யாரிடம் இருந்து வந்தது என்று அனைவருக்கும் தெரியும்.அதன் பிறகு நான் அவர்களிடம் கூறினேன் குனிந்து நெளிய வேண்டாம் நேராக வணக்கம் சொன்னாலே போதும் என்று. தற்போது அனைவரும் நிமிர்ந்து நிற்கிறார்கள் என்றார்.

கீ.வீரமணி மேடை பேச்சு: 

திராவிடம் வெல்லும் அதை வரலாறு சொல்லும் இதை எந்த கொம்பனாலும் மாற்ற முடியாது. துறவி என்று சொல்லும் பொழுது நாம் சற்று யோசித்து சொல்ல வேண்டும் ஏனென்றால் நம் நிதியமைச்சர் கோவையில் உள்ள துறவியை தோலுரித்து காட்டியவர் பல ஆக்கிரமிப்புகளை வெளிகொண்டு வந்தவர்.

மத்தியில் இருக்க கூடிய விசித்திரமான சூழல் என்ன வென்றால் பிரதமர் இரண்டாவது முறையாக பதவி ஏற்ற பொழுது அரசியல் அமைப்பு சட்ட புத்தகத்தை வணங்கினார். அரசியல் அமைப்பு சட்ட புத்தகத்திற்கு அவ்வளவு மரியாதை தருகிறார் என்றால் அதில் எந்த சட்டத்தை பின்பற்றுகிறார் என்பது தான் என் கேள்வி. முதல்வர்களில் முதன்மையானவர் நம் முதல்வர் என்பதை ஆறு மாதத்தில் தற்போது நிரூபித்துள்ளார். பெரியாரின் போராட்டங்கள் எப்பொழுதும் உடனடி வெற்றியை தராது ஆனால் உரிய நேரத்தில் வெற்றி வந்தே தீரும்.நீட் தீர்மானம்,7பேர் விடுதலை உள்ளிட்ட தமிழக அரசின் தீர்மானங்களை  ராஜ்பவனில் உள்ள ஊறுகாய் ஜாடியில் ஊறிக்கொண்டு இருக்கிறது. இதை விட அரசியல் சட்டத்தை கொச்சை படுத்துபவர்கள் யார். பெரியார் என்ற ஆயுதம் என்றும் கூர்மையான ஆயுதம். இன்றைய ஆட்சிக்கு திராவிடர் கழகம் வாலாகவும் இருக்கும்,கேடையமாகவும் இருக்கும். இவ்வாறு பேசினார். 
 

click me!