விசிகவினர் கருத்தை கருத்தால் எதிர்கொள்கிறார்களா.? திருமாவளவனுக்கு எதிராக கொதிக்கும் இணைய திமுக உடன்பிறப்புகள்!

By Asianet TamilFirst Published Dec 24, 2021, 9:12 AM IST
Highlights

நாம் தமிழர் கட்சிக்கு வக்காலத்து வாங்குவதை ஏற்க முடியாது. ஜெயலலிதாவோடு கூட்டணியில் இருந்த போது அந்த அம்மையாரிடம் இது போன்ற கோரிக்கைகள் வைத்திருக்கிறீர்களா? உங்கள் கட்சி தொண்டர்கள் எல்லாம் கருத்தை கருத்தால் மட்டும்தான் எதிர்கொள்கிறார்களா? திமுக என்றவுடன் உங்கள் எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் எங்கிருந்து வருகிறது?

தருமபுரியில் நாம் தமிழர் கட்சியின் மேடையில் ஏறிய தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சியான விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியதற்கு இணையத்தில் திமுக ஆதரவாளர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், திமுகதான் நிஜ சங்கி என்று செருப்பை எடுத்துக் காட்டியது சர்ச்சையானது. இதனால், சீமான் மீது போலீஸ் நிலையத்தில்கூட திமுகவினர் அளித்தனர். அதன் தொடர்ச்சியாக இஸ்லாமியர்கள், 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக தருமபுரி மாவட்டம் மொராப்பூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசையும் அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலினை ஒருமையில் நாம் தமிழர் கட்சியினர் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த திமுகவினர் நாம் தமிழர் கட்சியின் மேடையேறி பேச்சை நிறுத்தும்படி மோதலில் ஈடுபட்டனர்.

மைக் தூக்கியெறியப்பட்டது. சேர்கள் பறந்தன. தாக்குதலும் நடைபெற்றது. இதனால், இணையத்தில் திமுகவினரும் நாம் தமிழர் கட்சியினரும் மாறி மாறி கருத்திட்டு மோதி வருகிறார்கள். இந்நிலையில் நாம்  தமிழர் கட்சியினர் மீதான தாக்குதலுக்கு முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்  தெரிவித்தார். தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இதேபோல திமுக கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவர் திருமாவளவனும் கருத்து தெரிவித்திருந்தார். “கருத்துக்கு கருத்தைத்தான் எடுத்து வைக்க வேண்டுமே தவிர  வன்முறையில் ஈடுபடக் கூடாது. நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் தகராறில் ஈடுபட்ட திமுகவினர் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என்று கூறியிருந்தார்.

திருமாவளவனின் இந்தக் கருத்துக்கு இணையத்தில் புழங்கி வரும் திமுகவினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்து வருகிறார்கள். திமுக சார்பாக விவாதங்களில் பங்கேற்கும் மதுரையைச் சேர்ந்த பாலமுருக ஃபேஸ்புக் பதிவில், “நாம் தமிழர் கட்சிக் கூட்டத்தில் தகராறு செய்த திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்... கருத்துக்கு எதிராக கருத்தை தான் முன் வைக்க வேண்டும் என்று சொல்றீங்க... நாம் தமிழர் கட்சியை சேர்ந்த யாராவது ஜனநாயக அடிப்படையில் இது வரை கருத்தை முன் வைத்திருக்கிறார்களா?  திமுக மீதும், கலைஞர் மீதும், எங்கள் தலைவர் மீதும் வன்மத்தோடு, ஆபாசமான வார்த்தைகளை தொடர்ந்து பேசி வருகிறார்கள்... கருத்துக்குத்தான் கருத்தை பதிலாக தர முடியும்... 

அதாவது... "ஸ்டாலின் கலைஞரை முன் மாதிரியாக வைத்து செயல்படாமல் ஜெயலலிதாவை முன் மாதிரியாக வைத்து செயல்படுகிறார்..." என்று கடந்த 2016 ஆனந்த விகடன் பேட்டியில் சொன்னீங்களே....  "ஏதோ சாதியை ஒழித்தவர் பெரியார் என்பது போல பேசுகிறார்கள்... அது தவறு..." என்று தொலைக்காட்சியில் பேசுனீங்களே... "பிரபாகரனுடன் இருந்திருந்தால் திருமாவும் போய் சேர்ந்திருப்பார்... என்று ராஜபக்சே சொன்னாரு... அதக்கேட்டு நான் சிரிச்சேன்.." அப்படின்னு நேர்காணலில் சொன்னீங்களே... இது போன்ற சந்தர்ப்பவாத, அவதூறான, வன்மம் நிறைந்த கருத்துக்களை நீங்கள் பேசியதை..... பெரியாரை பற்றி இழிவாக உங்கள் கட்சி எம்.பி ரவிக்குமார் எழுதியதை நினைத்தால் உங்கள் மீது எங்களுக்கும் கோபம் உண்டு.

ஆனால், அது கருத்து சுதந்திரம் என்று நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்... ஏனென்றால் நாங்கள் கலைஞர் வழி வந்தவர்கள்.... ஆனால். அதற்காக நாம் தமிழர் கட்சிக்கு வக்காலத்து வாங்குவதை ஏற்க முடியாது. ஜெயலலிதாவோடு கூட்டணியில் இருந்த போது அந்த அம்மையாரிடம் இது போன்ற கோரிக்கைகள் வைத்திருக்கிறீர்களா? உங்கள் கட்சி தொண்டர்கள் எல்லாம் கருத்தை கருத்தால் மட்டும்தான் எதிர்கொள்கிறார்களா? திமுக என்றவுடன் உங்கள் எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் எங்கிருந்து வருகிறது?” என்று காட்டமாக விமர்சிதுள்ளார்.  ‘சீமானை ஆதரிக்கும் ஒருவரும் நமக்கு தேவையில்லை’ என்றும் திமுகவினர் பதிவிட்டு வருகிறார்கள். பதிலுக்கு விசிகவினரும் பதில் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். அதே வேளையில் திருமாவளவனுக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் கட்சியினரும் பதிவிட்டு வருகிறார்கள்.

click me!