’நாமதான் இருப்போம் புரியுதா..?’ சொன்னதை நடத்திக் காட்டிய அன்புமணி..?

By Thiraviaraj RMFirst Published Apr 19, 2019, 11:39 AM IST
Highlights

பலத்த போலீஸ் பாதுகாப்பு, தேர்தல் அலுவலர்களுக்கு முன்னிலையில் ஒருவரே 6 ஓட்டுக்கள் போட்ட விவரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 

பலத்த போலீஸ் பாதுகாப்பு, தேர்தல் அலுவலர்களுக்கு முன்னிலையில் ஒருவரே 6 ஓட்டுக்கள் போட்ட விவரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தருமபுரி மக்களவை தொகுதிக்கும் அதற்குட்பட்ட  பாப்பிரெட்டிப்பட்டி இடைத்தேர்தலும் நடைபெற்றது. அங்கு நத்தமேடு பகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவில் பல அத்துமீறல்கள் நடைபெற்றுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. 

இது குறித்து ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில், நத்தமேடு தொகுதியில் பல ஆண்டுகளாக தேர்தல்களில் அத்துமீறல்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கும் அந்த பகுதியில், மற்ற சமூகத்தை சேர்ந்தவர்களின் வாக்குகளை கள்ள ஓட்டுக்களாக பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. அங்கு பணியிலிருந்த வெளி மாநிலத்தை சேர்ந்த பாதுகாவலர் ஒருவர் கூறும்போது "எனது அனுபவத்தில் இதுபோன்ற ஒரு மோசமான வாக்குச்சாவடியை பார்த்ததில்லை’’ என தெரிவித்துள்ளார். அங்கு இருக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுவர்கள் என அனைவரும் மிரட்டப்பட்டுள்ளனர். காவலர்களும் மிரட்டப்பட்டதாகவும், எனவே அவர்கள் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

வாக்குச்சாவடி வாசலில் நின்று பேசிய ஒரு இளைஞர், ’தான் 6 ஓட்டு போட்டு ரூ.6 ஆயிரம் பெற்றுக் கொண்டதாகவும், மற்றொரு இளைஞர் ’தான் 4 ஓட்டு மட்டுமே போட்டதாகவும்’ கூறியுள்ளனர். இதை அங்கிருந்த பாதுகாப்பு போலீஸ் முன்னிலையிலேயே அவர்கள் பேசியுள்ளனர். அதுமட்டுமின்றி வாக்காளர் அடையாள அட்டை உட்பட இந்த ஆவணமும் இன்றி, வெறும் பூத் சிலீப்பை மட்டும் வைத்துக்கொண்டு இரண்டு பெண்கள் வாக்களித்துள்ளனர். இளைஞர்கள் உட்பட அனைவர் வாக்களிக்கும்போது செல்போனை கொண்டு சென்றுள்ளனர். அதைக் கேட்ட தேர்தல் பணியாளர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக பேசிய மாவட்ட ஆட்சியர், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் அனைத்து பதிவாகியுள்ளதாகவும், நல்ல வேளை அந்த கேமராக்களை யாரும் அணைத்துவிடவில்லை. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.  
தருமபுரி தொகுதி மக்களவை வேட்பாளராக பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் களத்தில் இறங்கினார். அவரை எதிர்த்து திமுகவை சேர்ந்த செந்தில்குமாரும் போட்டியிட்டார். அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் களமிறக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் திருப்போரூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில்,  பேசிய அன்புமணி ராமதாஸ், ‘வாக்குச்சாவடிகளில் நாம தானே இருப்போம், புரிகிறதா? என பேசினார். இதே கருத்தை தொடர்ந்து 3 முறை புரிகிறதா? என கேட்டு, நாம் மட்டுமே இருக்கும்போது என்ன நடக்கும்? என்று மறைமுக ஒரு விஷயத்தை தெரிவித்து இருந்தார்.

அன்புமணி ராமதாஸ் தெரிவித்த கருத்து எதிர்க்கட்சிக்கு செல்லும் வாக்குகளை செல்லவிடாமல் தடுக்கும் வகையில் அமைந்து இருப்பதால் அவரது பேச்சுக்கு தி.மு.க. கடும் ஆட்சேபணை தெரிவித்திருந்தது. இந்நிலையில் நத்தமேடு வாக்குச்சாவடியில் முறைகேடாக வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  

click me!