
ஆயா கடை இடியாப்பத்தின் சிக்கலை கூட பிரித்தெடுத்து துவக்கம் எது, முடிவு எது என்று சொல்லிவிடலாம் போலா ஆனால் அ.தி.மு.க.வில் நிலவும் குழப்பங்களுக்கு தீர்வும், தெளிவும் இல்லாமல் சிக்கல் மேல் சிக்கலாகிக் கொண்டிருக்கின்றன.
அ.தி.மு.க. எனும் பேரியக்கம் அழிந்துவிடக்கூடாது என்பதில் அந்த கட்சியின் மற்ற முக்கியஸ்தர்களை விட சசிகலாவுக்கு ஒரு இன்ச் அதிகமாகவே அக்கறை இருக்கிறது. காரணம், கட்சி கம்பீரமாக இருந்தால்தான் வெற்றி, அதிகாரம், ஆதாயம் எல்லாமே வாய்க்கும் என்பது மட்டுமல்ல, 30 ஆண்டுகாலமாக ஜெயலலிதாவின் நிழலாக இருந்து அவரை மட்டுமா கவனித்துக் கொண்டார்? கட்சியையும்தானே கவனித்தார் சரி! அந்த பாசமும் முக்கிய காரணம்.
அதனால்தான் ஜெ., மரணித்ததும் பன்னீர்செல்வத்தை காபந்து முதல்வராக்கினார். பின் கட்சியின் பொதுச்செயலாளராகிவிட்டு, முதல்வர் பதவியையும் கைப்பற்ற துணிந்தார். ஆனால் விதி அவரை பரப்பனவுக்கு பறக்க வைத்தது. சிறை செல்லும் முன் எடப்பாடியை முதல்வராக்கிவிட்டு, தன் அக்காள் மகன் தினகரனை துணை பொதுச்செயலாளராக்கினார்.
ஆனால் எடப்பாடி அணியோ இவர்கள் இருவரையும் கட்சியிலிருந்து ஒதுக்கி வைத்துவிட்டோம் என்கிறது. ஒட்டுமொத்த அ.தி.மு.க.வையும் இரட்சிப்பார் என்று சசியால் இறக்கிவிடப்பட்ட தினகரன் தனி அணி அமைத்து தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருக்கிறார்.
இதில் நொந்து போன சசி, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக தன் தம்பி திவாகரனை களமிறக்கியிருக்கிறார். தினகரன் சாணக்கியன் ஆனால் திவாகரனோ சத்ரியன். இப்போதிருக்கும் சூழலுக்கு அதிரடியான திவாகரனே சரி, பிளந்து கிடக்கும் கட்சியை மளமளவென ஒரணியாக்கி ஒட்ட வைப்பார் என்று சசி நினைத்தார்.
ஆனால் திவா எவ்வளவு முயன்றும் பப்பு வேகமாட்டேங்குது. தடாலடி திவா தன் இயல்புகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு மிக பவ்யமாக இறங்கி வந்து எடப்பாடி, பன்னீர் இருவரிடமும் பேசியும் இணைப்பு ஒத்து வரவில்லை. திவாவின் தோல்வி தகவல்கள் அண்மையில் சசியை சந்திக்க சென்றவர்களின் மூலம் அவரை அடைந்த போது மிக மோசமாக மனம் வெறுத்திருக்கிறார் சசி.
’இன்னும் மூணு வருஷங்களுக்கு மேலா நான் வெளியில வர முடியாது. இத்தனை மாசத்துக்குள்ளேயே இவ்வளவு பிரச்னைன்னா இன்னும் 3 வருஷங்களுக்குள்ளே கட்சி என்னாகும்? கட்சியோட நிலைமையை நினைச்சு நினைச்சு சிறைக்குள்ளேயே எனக்கு ஏதாச்சும் ஆனாலும் ஆகிடும் போல இருக்குது!’ என்று கலங்கியிருக்கிறார்.
உடைந்து போய் சசி பேசியது அப்படியே ம.நடராஜனின் காதுகளுக்கு பாஸ் ஆகியிருக்கிறது. மிக கவலையாக யோசித்திருக்கிறார் அவர். நடராஜனுக்கும், சசிக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று கடந்த சில வருடங்களாகவே கூறப்பட்டு வந்தாலும் கூட, 2011 தேர்தல் அறிக்கையெல்லாம் தன் வீட்டில்தான் தயாராகியது என்பதை நடராஜனே ஒத்துக் கொண்டிருக்கும் வகையில் நடராஜனுக்கு அ.தி.மு.க. மீது இருக்கும் செல்வாக்கு புரிகிறதுதானே.
அதுவும் ஜெயலலிதாவின் கவனத்துக்கு உட்பட்டே நடரஜன் இதை செய்திருக்கிறார் எனும் நிலையில் தற்போது நடராஜன் தன் மனைவியை பற்றி வருந்துவதில் ஆச்சரியமில்லை.
ஆக வருந்திய நடராஜன் திவாகரன் மற்றும் தினகரன் இருவருக்கும் போன் செய்து ”உங்களுக்கும் அ.தி.மு.க.வுக்கும் எப்படி சம்பந்தம்? சசிகலாவால்தானே! உங்களுக்கெல்லாம் இவ்வளவு பெரிய வாழ்க்கையை, அதிகாரத்தை, மரியாதையை எற்படுத்திக் கொடுத்துவிட்டு சிறையில் கிடக்கிறார். அவர் மனசை இன்னும் நோகடிக்காதீங்கப்பா. ஏதாச்சும் செஞ்சு கட்சியை இணைக்குற வழியை பாருங்க. மத்தவங்கட்ட பேசுறதுக்கு முன்னாடி முதல்ல நீங்க உங்களுக்குள்ளே ஒத்துமையாகுங்க.
நீங்க ஒண்ணா இருந்தால்தான் மத்தவங்க உங்களை மதிப்பாங்க. நீங்க சொல்ற சொல்லுக்கு இறங்கி வருவாங்க. உங்களுக்கு உங்க அக்கா மேலே, உங்க சித்தி மேலே எந்தளவுக்கு பாசம் இருக்குதோ அது எனக்கு தெரியாது. ஆனா என் மனைவியோட உடல் நலன் எனக்கு முக்கியம்.” என்று மிகவம் நெகிழ்வாக பேசியிருக்கிறார்.
இதை தொடர்ந்து தினகரனும், திவாகரனும் ஒரு இடத்தில் சந்தித்துப் பேசும் சூழல் உருவாக்கப்பட்டதாம். அக்கா சசிகலாவின் உடல் நிலையை மேற்கோள்காட்டி கட்சியில் சமாதானம் நிலவ வேண்டுமென்று திவா மிகவும் உணர்ச்சிப் பிழம்பாக பேசினாராம்.
ஆனால் தினகரனோ வழக்கம்போல் மிஸ்டர் கூல் ஆக இருந்து அழுத்தமான, அர்த்தமுள்ள தகவல்களை எடுத்து வைத்தாரம். கூடவே தனது அணி, தனது அதிகார பாதுகாப்பு குறித்தும் சில விஷயங்களை எடுத்து வைத்துவிட்டு கிளம்பியிருக்கிறார்.
இனி இருவரும் சேர்ந்து கட்சியின் பிளவுகளை சரிகட்டி, வலுப்படுத்தும் முயற்சிகளை செய்யலாம் என்று திவா சொன்னபோது தினகரன் மெளனமாக தலையாட்ட மட்டும் செய்தாராம். தினகரன் எந்தளவுக்கு திவாவுடன் கைகோர்த்து பணிகளில் இறங்குவார் என்பது சந்தேகத்துக்கு உரியதாகத்தான் இருக்கிறது என்கிறார்கள் தினகரனின் ஆதரவாளர்கள்.
தினகரனும், திவாகரனும் சந்திக்க ஏற்பாடு செய்தவர் டாக்டர். வெங்கடேஷ். சந்திப்பு முடிந்ததும் அதை அப்படியே எம்.என்.னுக்கு போன் போட்டு விவரிக்கவும் செய்தாராம்.
இதன் பிறகே நடராஜன் சகஜமானார் என்று தகவல். அ.தி.மு.க.வின் பிளவுகளை இணைக்க என்னென்ன அஸ்திரமெல்லாமோ பயன்படுத்தப்பட்டு வீணான நிலையில் சசியின் உடல் நிலை பற்றிய சென்டிமென்ட் அஸ்திரம் இப்போது பிரயோகிக்கப்படுகிறது.
இது ஒர்க் அவுட் ஆகுமா? ஓரங்கட்டப்படுமா!