
முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்தவுடன் கட்சியையும் ஆட்சியையும் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவந்தார் சின்னம்மா சசிகலா.
இதனையடுத்து கட்சி நிர்வாகிகள் கட்டுக்குள் இருந்தாலும் தமிழகம் முழுவதும் தொண்டர்கள் ஆங்காங்கே கொந்தளிப்பதை பார்க்கமுடிகிறது.
பிரமுகர்கள் என எடுத்து கொண்டால் நடிகர் ஆனந்தராஜ் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே விலகிவிட்டதாக தெரிகிறது.
கடந்த இரண்டு நாட்களாகவே அதிமுக செய்தி தொடர்பாளராக இருக்ககூடிய நாஞ்சில் சம்பத் கட்சியை விட்டு விலகிவிட்டதாக தொடர்ந்து தகவல் பரவி வந்தது.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் செய்தியாளர்களிடம் பேசிய அவரது மகள் மதிவதனி இதனை திட்டவட்டமாக மறுத்தார்.
தனது தந்தை நாஞ்சில் சம்பத் அரசியலிலிருந்து விலகபோவதாக இதுவரை யாரிடமும் கூறவில்லை என்றும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்றும் தெரிவித்தார்.
அரசியலிலிருந்து விலகப்போவதாக வரும் தகவல்கள் அனைத்தும் தவறானவை என திட்டவட்டமாக தெரிவித்தார்.
உடல்ன்பிலை சரியில்லாததால் மார்த்தாண்டத்தை அடுத்த மனக்காவிளையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாஞ்சில் சம்பத் குறித்த வதந்தி அவர் மகளின் பேட்டியினால் சற்று அடங்கினாலும் நாஞ்சில் சம்பத் வாய் திறக்காததால் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.