
அடிப்படை உறுப்பினராகக்கூட தினகரன் இல்லை என தற்போது சொல்லும் ஆட்சியாளர்கள் தான் அவருக்காக ஆர்.கே.நகரில் வாக்கு கேட்டார்கள் என தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, தினகரன் ஆகிய மூன்று தரப்பிலும் தீவிர பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்டு இரட்டை இலையையும் இழந்து நிற்கும் தினகரன், இந்த தேர்தலில் வெற்றி பெற்று தொண்டர்கள் மற்றும் மக்களின் ஆதரவு தங்களுக்குத்தான் உள்ளது என்பதை நிரூபிக்க போராடுகிறார்.
அதேநேரத்தில் இரட்டை இலையை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் களம் காணும் அதிமுக, ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆர்.கே.நகரில் மீண்டும் வெற்றி பெற்று மக்களின் ஆதரவு தற்போதைய ஆட்சியாளர்களுக்கு உள்ளது என்பதை நிரூபிக்க படாத பாடு படுகின்றனர்.
எப்படியும் அதிமுகவின் ஓட்டுவங்கி இரண்டாகப் பிரியப்போகிறது. வாக்குவங்கியின் பிரிவு, அதிமுக அரசின் மீதான அதிருப்தி ஆகியவற்றை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அறுவடை செய்து வெற்றியை பெற்றே தீர வேண்டும் என திமுகவும் தீவிரமாக செயல்படுகிறது.
இதற்கிடையே, லயோலா கல்லூரி பேராசிரியர் ராஜநாயகம் மற்றும் பத்திரிகையாளர் அன்பழகன் தலைமையிலான குழுக்கள் நடத்திய கருத்துக்கணிப்புகளின் முடிவிலிருந்து பிரதான போட்டி என்பது திமுகவிற்கும் தினகரனுக்கும் இடையிலேயே இருக்கும் என தெரிகிறது. அந்த இரண்டு கருத்து கணிப்புகளிலும் அதிமுகவின் வேட்பாளர் மதுசூதனன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஆர்.கே.நகரில் திமுக, அதிமுக, தினகரன் ஆகிய மூன்று தரப்பும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த ஆட்சியாளர்களும் களத்தில் இறங்கி வாக்கு சேகரித்துவருகின்றனர்.
ஆர்.கே.நகர் பிரசாரத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, அதிமுகவில் தினகரன் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. ஆனால் அவர் இரட்டை இலையை மீட்பேன் என்கிறார். அதிமுக ஆட்சியை கலைக்க திமுகவுக்கு தினகரன் துணைபோகிறார். திமுகவுடன் தினகரன் மறைமுக கூட்டணி வைத்துள்ளார் என முதல்வர் பழனிசாமி பேசினார்.
இதற்கு பதிலளித்துள்ள தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத், அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட தினகரன் இல்லை என தற்போது கூறும் இவர்கள்தான் ஆர்.கே.நகரில் தினகரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். அப்போது இந்த தற்குறிகளுக்கு தினகரன் அடிப்படை உறுப்பினர் இல்லை என்ற விவரம் தெரியாதா? என கேள்வி எழுப்பினார். மேலும், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது என அவர்கள் கூறும் தினகரன் தான் அவர்களின் அடிப்படையவே தகர்க்கப்போகிறார். திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.