
இரு அணிகளும் இணைந்து என்ன செய்யப் போகிறார்கள்? காவிரி நீரைக் கொண்டு வரப்போகிறார்களா, மாநில உரிமைகளை மீட்டெடுக்கப் போகிறார்களா? என்று தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் நக்கலடித்துள்ளார்.
தினகரன் கைது பின்னணியில் பாஜக இல்லை எனவும், நியாயமானது என ஓபிஎஸ் ஆதரவாளர் பொன்னையன் கூறியுள்ள நிலையில், இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த நாஞ்சில் சம்பத், ''தினகரன் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் பாஜக உள்ளது. மத்திய அரசுக்கும், எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று ஓபிஎஸ் தரப்பில் பேசிவருவது அப்பட்டம். பாஜகவுக்கு விலை போனவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். பாஜக நிகழ்த்தி வரும் நாடகத்துக்கு அவர்கள் உடந்தையாக இருக்கிறார்கள்.
இரு அணிகள் இணைப்புக்கான சூழ்நிலை கனிந்து வருகிறது என்று ஓபிஎஸ் சொன்னபோதே நான் யூகித்தேன். அடுத்த சில நிமிடங்களிலேயே தினகரன் கைது செய்யப்பட்டார்.
ஓபிஎஸ்ஸுக்கு மத்திய அரசு 'Y' பிரிவு பாதுகாப்பு எதற்கு? இந்த பாதுகாப்பளிக்க என்ன தேவை வந்தது? அவர்கள் பாஜகவின் நாடகத்துக்கு விலை போனவர்கள். இது அதிமுகவிற்கு வந்த சாபம்.
சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயற்சித்தவரைக் கைது செய்தவர்கள் வாங்கியவரை ஏன் கைது செய்யவில்லை? இது என்ன நியாயம்?
சசிகலாவின் புகைப்படங்களை அதிமுக தலைமைக் கழகத்திலிருந்து உடனே அகற்றி அதன் புனிதத்தை காப்பாற்ற வேண்டும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் மதுசூதனன் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத் மதுசூதனன் ஒரு காலத்தில் சின்னம்மா காலடியில் இருந்து, அவர் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று மன்றாடியவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
122 எம்எல்ஏக்கள், 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்து மாவட்ட செயலாளர்கள், தேர்தல் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருமே தினகரனுக்குத்தான் ஆதரவாக இருக்கிறார்கள்.
அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து சசிகலா, தினகரன் பேனர்கள் அகற்றப்பட்டது அபத்தமான செயல். காற்றைக் கைது செய்யமுடியாது. கழகத்தின் பொதுச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் நீக்கப்படுவதை யாராலும் அனுமதிக்க முடியாது.
இரு அணிகளும் இணைய வேண்டிய அவசியமில்லை. கட்சிக்கும், நாட்டுக்கும் ஓபிஎஸ் பச்சைத் துரோகம் செய்துவிட்டார். கட்சியும், ஆட்சியும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தினகரன் கட்சியில் இருந்து ஒதுங்குவதாகத் தெரிவித்தார்.
இப்போதுள்ள நிலையில், இரு அணிகளும் இணைந்து என்ன செய்யப் போகிறார்கள்? காவிரி நீரைக் கொண்டு வரப்போகிறார்களா, மாநில உரிமைகளை மீட்டெடுக்கப் போகிறார்களா? இவ்வாறு நாஞ்சில் சம்பத் கொந்தளித்துள்ளார்.