நாங்குனேரி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் இவர்தான் !! முடிவாகிவிட்டதாக தகவல் !!

By Selvanayagam PFirst Published Sep 25, 2019, 9:00 AM IST
Highlights

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட மொத்தம் 22 விருப்ப  மனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில் முன்னாள் எம்எல்ஏவும் தற்போதைய கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான வசந்தகுமாரின் மகன் நடிகர் விஜய் வசந்த் களமிறங்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2016ஆம் ஆண்டு நாங்குனேரி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஹெச்.வசந்தகுமார் 73 ஆயிரத்து 932 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஹெச்.வசந்தகுமார் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு எம்பி ஆக தேர்வானார். இவர் எம்பி ஆனதையடுத்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து அந்த தொகுதி காலியாக இருந்து வந்தது.

தற்போது நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகின்ற அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் கட்சியின் முக்கிய தலைவர்கள் தங்களது விருப்ப மனுக்களை அளித்துள்ளனர். இதில், போட்டியிட விரும்பும் உறுப்பினர்களுக்கான விருப்ப மனுக்கள் சென்னை சத்தியமூர்த்தி பவனில் விநியோகம் செய்யப்பட்டன.

மூத்த உறுப்பினரும், ஹெச்.வசந்தகுமாரின் சகோதரருமான குமரி அனந்தன் போட்டியிட விருப்ப மனு பெற்றுள்ளார். அதேபோல் ஹெச்.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் பெயரிலும் விருப்ப மனு பெறப்பட்டுள்ளது. இந்த விருப்ப மனுக்கள் வழங்கும் பணி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

இதுவரை மொத்தம் 26 உறுப்பினர்கள் விருப்ப மனுக்களை பெற்று அதில் 4 உறுப்பினர்கள் தங்களுடைய மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். இதையடுத்து நாங்குநேரி தொகுதியில் போட்டியிட மொத்தம் 22 பேர் விருப்ப மனுக்களை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முதிர்வயது காரணமாக குமரி அனந்தன் தேர்தலில் போட்டியிட அவரது தம்பி வசந்தகுமாரும், குடும்பத்தினரும் விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து வசந்தகுமாரின் மகனும், நடிகருமான விஜய் வசந்த் காங்கிரஸ் கட்சி சார்பில் நாங்குனேரியில் களமிறக்கப்படலாம் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

click me!