கிருமி நாசினி தெளித்தது குற்றமா..?? தமிழக காவல் துறை மீது பாய்ந்த சீமான்..!!

By Ezhilarasan BabuFirst Published Apr 6, 2020, 10:22 AM IST
Highlights

கிருமி நாசினி தெளித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த காவல்துறையினர் கட்சி சீருடையில் பணியாற்றக்கூடாது எனக் கூறி அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். 

மதுரை தெற்கு தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் உறவுகள் கடந்த இரண்டு நாட்களாக மதுரை பந்தடி, சோலை அழகுபுரம் ஆகிய பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக உரிய கருவிகளோடு கிருமி நாசினி தெளித்து வருகிறார்கள்.  அவ்வாறு ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 மணியளவில் மதுரை சோலை அழகுபுரத்தில் கிருமி நாசினி தெளித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த காவல்துறையினர் கட்சி சீருடையில் பணியாற்றக்கூடாது எனக் கூறி அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். 

நீண்டநேரக் காத்திருப்புக்குப் பிறகு, கிருமி நாசினி தெளித்த 4 பேர் மீதும் கட்சி சீருடையுடன் பணியாற்றியதால் வழக்குப் பதிவுசெய்து, விடுவித்தனர். ஆனால், கைப்பற்றிய கிருமி நாசினி தெளிப்பு இயந்திரத்தை திரும்ப வழங்கவில்லை. இப்பேரிடர் காலக்கட்டத்தில் துயர்துடைப்புப் பணிகளுக்காக தன்னார்வத்தோடும், அர்ப்பணிப்போடும் களத்திற்கு வரும் இளைஞர்களை அரசியல் வேறுபாட்டினாலும், காழ்ப்புணர்ச்சியினாலும் பணிசெய்யவிடாது தடுப்பது முறையல்ல; 

அவ்வாறு வரும் தன்னார்வத் தொண்டர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, அவர்களை உள்ளடக்கிய தன்னார்வக்குழு அமைத்து மக்களைக் காக்கும் பெரும்பணியினை செய்ய வேண்டுமென தமிழக அரசிற்கு நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம். மேலும் நாம் தமிழர் உறவுகள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற்று கைப்பற்றப்பட்ட கருவிகளை திரும்ப அவர்களிடமே வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
 

click me!