
அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வ பத்திரிக்கை நமது புரட்சி தலைவி அம்மா இதழ், பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் வெளியிடப்பட உள்ளது.
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு, அதிமுகவின் பொது செயலாளராக நியமிக்கப்பட்டார் சசிகலா. அதிமுகவின் அவைத் தலைவர் மதுசூதனன் முன்மொழிய, அப்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழி மொழிந்தார். சில நாட்களுக்குப் பிறகு, சசிகலா முதலமைச்சராக வேண்டும் என்ற பேச்சு எழுந்தது. இதனால் ஓ.பி.எஸ். கடும் அதிருப்திக்கு ஆளானார்.
இதனைத் தொடர்ந்து பன்னீர்செல்வத்திடம் இருந்து ராஜினாமா கடிதம் பெறப்பட்டு, சசிகலாவை முதலமைச்சராக தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றன. சசிகலாதான் எங்கள் பொது செயலாளர் என்று வழி மொழிந்த ஓ.பன்னீர்செல்வம், திடீரென அவருக்கு எதிராக களமிறங்கினார். அவருடன் 11 எம்.எல்.ஏ.க்கள் உடனிருந்தனர்.
சசிகலாவுக்கு எதிராக போராட்டம் நடத்தியபோது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அம்மா தொலைக்காட்சி என்கிற சேனல் ஒன்று துவக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இதற்காக, சென்னை ராயப்பேட்டையில், “Two Wheels Media" என்ற நிறுவனம் துவக்கப்பட்டது. அதன் மூலம் தொலைக்காட்சி, பத்திரிக்கை நடத்த முடிவெடுக்கப்பட்டது. தற்போது அந்த முடிவு, முதலமைச்சர் பழனிசாமியிடம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தெரிவிக்க, அதனை எடப்பாடி ஏற்றுக் கொண்டது. இதனைத் தொடர்ந்து தான் அதிமுகவுக்கென தனி தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையாக பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் நமது புரட்சி தலைவி அம்மா இதழ் வெளியிடப்பட உள்ளது. அதேபோல் தொலைக்காட்சி ஆரம்பிக்கும் பணிகளும் விரைந்து நடந்து வருகின்றன.