
இப்போதெல்லாம் தேனி மாவட்டத்தில் தேள் கொட்டினால் டெல்லி மேலிடத்தில் நெரி கட்டுகிறது. இது என்னமோ தெரியலை, என்ன மாயமோ புரியலை. பன்னீர் செல்வத்துக்கு கோபம் வந்தால் மோடியின் பெயர் அசிங்கப்படுகிறது. இந்த அசிங்கத்துக்கு பதில் அசிங்கத்தை பி.ஜே.பி. யோசிக்காமலா இருக்கும்?அதனால்தான் டார்கெட் ரவீந்திரநாத்! என்று ஒரு மெல்லிய சப்தம் கேட்கிறது தலைநகரில் இருந்து! என்கிறார்கள்.
கடந்த 16-ம் தேதியன்று தேனியில் நடந்த ஜெ., பிறந்தநாள் விழா ஆலோசனை கூட்டத்தில் ‘மோடி சொன்னதால்தான் எடப்பாடி அணியுடன் இணைந்தேன், அமைச்சர் பதவியை வாங்கினேன்.’ என்று பன்னீர்செல்வம் உடைத்துப் பேசியது பி.ஜே.பி.யை கதிகலங்க வைத்திருக்கிறது. பன்னீர் சொன்னது உண்மையா? இல்லையா! என்பது வேறு கதை. ஆனால் தேசிய அளவில் மக்கள் மன்றத்தில் பிரதமரின் பெயரை அசிங்கப்படுத்திவிட்டார் பன்னீர்செல்வம்! என்று கொதிக்கிறது பி.ஜே.பி.
இந்த பிரச்னை தமிழகம் மற்றும் டெல்லியோடு முடிந்துவிடவில்லை. தமிழக துணை முதல்வர், பிரதமரை பற்றி சொன்ன வார்த்தைகளை இந்த நாடு முழுக்க இருக்கின்ற, பி.ஜே.பி.க்கு எதிரான நிலைப்பாடுடைய அத்தனை கட்சி தலைவர்களும் தங்கள் மொழியில் மொழி பெயர்த்து கேட்டறிந்திருக்கிறார்கள். கம்யூனிஸ்டுகள் இதை வைத்துக் கொண்டு தனி லாபி செய்ய துவங்கிவிட்டனர்.
அதிலும் குறிப்பாக இந்திய கம்யூனிஸ்டானது மோடியை, ‘சர்வதேச அளவில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் நபர்’ என்று தா.பா.வின் வாய்மொழி வழியே பாய்ந்து பிறாண்டியிருக்கிறது.
’சுய தேவைக்காக பிராந்திய கட்சிகளின் உள் விவகாரத்துக்குள் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்யும் நபர்தான் மோடி’ எனும் ரீதியில் தேசம் முழுக்க இருந்து எதிர்ப்பு வசவுகள் வந்து வீழ துவங்கிவிட்டன. பி.ஜே.பி.க்கு இது மிகப்பெரிய அவமானமாக போயிருக்கிறது.
ஏற்கனவே தமிழக பி.ஜே.பி.யின் முக்கிய தலைவரும், மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு முட்டல் மோதல் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் பன்னீரின் இந்த பேச்சுக்குப் பிறகு, அவர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து தனி லாபியில் ஈடுபட துவங்கிவிட்டார் என்று தகவல்கள் வருகின்றன. பிரதமரின் தமிழக வருகை குறித்து ஆலோசிப்பதற்காக எடப்பாடியை பொன்னார் சந்திப்பதில் இந்த விஷயமும் முக்கியமாக உள்ளடங்கி உள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
தன் கோபத்தின் வெளிப்பாட்டாக இன்று பிரதமரை பற்றிய ரகசியத்தையே உடைத்தவர், நாளை நம்மை பற்றியும் கோபத்தில் என்ன வேண்டுமானாலும் பேச மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? என்று மிரண்டு இருக்கிறார் எடப்பாடி. அதனால் எதிரியின் எதிரி தனக்கு நண்பன், எனும் ரூட்டில் பி.ஜே.பி.யுடன் மேலும் இணக்கமாகிவிட்டாராம் பழனிசாமி.
மோடியை அசிங்கப்படுத்தும் விதமாக பேசியிருக்கும் பன்னீர்செல்வத்துக்கு சரியான நாக் அவுட்டுகளை கொடுக்க தமிழக பி.ஜே.பி. தயாராகிவிட்டது என்கிறார்கள். அவர்களின் கோபமானது ரெய்டுகளின் வாயிலாகவும் வடிகால் தேடும் என்கிறார்கள்.
குறிப்பாக, பன்னீரின் மகன் ரவீந்திரநாத் குறிவைக்கப்படலாம் என்பதே இப்போதைக்கு விமர்சகர்கள் சுட்டிக்காட்டும் தகவல். அதாவது, பன்னீர்செல்வத்தின் ஆட்சி அதிகாரத்தின் வாயிலாக சேர்க்கப்பட்ட மற்றும் சேர்ந்து கொண்டிருக்கிற சொத்துக்கள் யாவையும் நிர்வகிப்பது ரவீந்திரநாத்தானாம். பன்னீருக்கு கடல் தாண்டி சில பல முதலீடுகள் இருப்பதகாவும், அவை அனைத்தையும் ரவியே கவனித்து வருவதாகவும் தகவல்.
இவையெல்லாம் தாண்டி சமீபத்தில் வெடித்திருக்கும் பன்னீரின் வீட்டு வசதிவாரிய துறையில் நிலம் வரைமுறை படுத்துவதற்காக லஞ்சம் அள்ளிக் குவிக்கப்படுகிறது எனும் விவகாரத்திலும் ரவியின் தலையே உருட்டப்படுகிறது.
அதனால் எந்த நாளிலும், எந்த நேரத்திலும் பன்னீரின் மகன் ரவீந்திரநாத்தை குறிவைத்து வருமான வரித்துறை பாயலாம்! என்கிறார்கள்.