
ஊரு ரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம், வீடு இரண்டுபட்டால் பங்காளிகளுக்கு கொண்டாட்டம் என்பதைப்போல, தினகரனுக்கும் மாமா டிவாகரனுக்கும் நடக்கும் குடும்பப்பிரச்சனையை சுட்டிக்காட்டி ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போதே முதல்வர் இருக்கையை அபகரிக்க திட்டமிட்டிருந்ததாக தினகரனை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் 'திவாகரனும் திகார்கரனும்' என்ற தலைப்பில் நையாண்டி கட்டுரையில் கிழி கிழி எனக் கிழித்துள்ளது.
இதில், திகார்கரனின் முகமூடியை கிழித்து தொங்கவிட்டிருக்கிறாரே, திவாகரன்... முடை நாற்றங்களை ஒருபோதும் மூடி வைக்க முடியாது. என்னதான் ஆழத்தில் போய்விட்டு வந்தாலும் 'அது நீருக்கு மேலே வந்துதான் ஆகும்' என்னும் கதையாகத்தான் இப்போது டோக்கன் தலைவனின் யோக்கியதை அவரது உறவினரின் வார்த்தைகளாலே வெளிவந்து சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது....
அப்பல்லோ மருத்துவமனையில் அம்மா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது, முதலமைச்சர் இருக்கையை அபகரிக்க 'முட்டை போண்டா' போட்ட திட்டம் அம்பலத்துக்கு வந்திருக்கிறது. அதிகார வெறி பிடித்து சதிகார கும்பலை கூட்டி அலைகின்ற திகார்கரன் அம்மா எப்போ மறைவார்.. திண்ணை எப்போ கிடைக்கும் என்று நாக்கை தொங்கவிட்டு அலைந்த கதையெல்லாம் இப்போதுதான் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியிருக்கிறது.
இன்னும் என்னென்ன பூதங்கள் வெளிவரப் போகுதோ தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் சத்தியம்.. அது திகார்கரனை தமிழகத்துக்குள்ளேயே தலைகாட்டக் கூடாது என்று நம் புரட்சித் தலைவி அம்மா துரத்தி அடித்ததும் பாண்டிச்சேரி பண்ணை வீட்டிலேயே அவரை பதுங்கிக் கிடக்க வைத்ததும் எவ்வளவு சரி என்பதற்கு திவாகரன் எடுத்துவிடும் திகில் செய்திகளே சாட்சி. விளம்பரத்தாலே உயரலாம்..
மீம்ஸ் மட்டும் போட்டே அரசியலில் மேதாவி ஆகலாம்..டோக்கன்களால் மக்களை ஏமாற்றி தொகுதியை பிடிக்கலாம்.. மனித ஜீவராசிகளுக்கான உரித்தான உணர்ச்சிகள் அத்தனையையும் சிரிப்புக்குள் புதைத்து உலகத்தை ஏமாற்றலாம் என்றலையும் திகார்கரனின் பித்தலாட்டங்கள் யாவும் மொத்தமாய் பல்லிளிக்கும் காலம் தொடங்கிவிட்டது. இவ்வாறு நமது அம்மா கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.