அரை வேக்காட்டு இயக்குநர் முருகதாசுக்கு அட்வைஸ் பண்ணு... ரஜினியை டார் டாராய் கிழித்த நமது அம்மா நாளிதழ்

By sathish kFirst Published Nov 11, 2018, 12:53 PM IST
Highlights

சர்கார் பட விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா கண்டனம் தெரிவித்துள்ளது.

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசு வழங்கிய இலவச பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனால், சர்கார் படத்திற்கு எதிராக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே சர்காருக்கு ஆதரவாகத் திரையுலகை சேர்ந்தவர்கள் குரல் கொடுத்துவருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத்தடுப்பதும், படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், ச ட்டத்திற்குப் புறம்பானசெயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” எனப் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் சர்காருக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்ததைக் கண்டித்து, நமது அம்மா நாளிதழில் இன்று (நவம்பர் 10) கட்டுரை வெளியிடப்பட்டுள்ளதுஅதில், “தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்தை எதிர்த்துப் போராடுவது நியாயமா என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அங்கலாய்த்திருக்கிறார். உச்ச நட்சத்திரமே உங்க உள்ளத்தை திறந்து சொல்லுங்க, எல்லா சான்றிதழ்களும் முடிந்து, வியாபாரத்திற்கு வந்து ஹார்லிக்ஸ் பாட்டில வீட்டுக்கு வாங்கி வந்து அதனை திறக்கும்போது, அதனுள்ளே ஒரு பல்லி கிடந்தால் எல்லாச் சான்றிதழ்களும் பெறப்பட்ட ஹார்லிக்ஸை, கீழே எடுத்துக்கொண்டு போய் கொட்டுவீர்களா? இல்லை, சான்றிதழ்கள் சரியாகத்தான் இருக்கிறது என்று அதனைச் செத்துக்கிடக்கும் பல்லியோடு சேர்த்து அதுவும் சத்துதான் என்று பருகுவீர்களா?” 

”தணிக்கை குழுவுக்கென்று சில வரைமுறைகள் இருக்கிறது. அதன் அடிப்படையில் திரைப்படங்களுக்கு சான்றிதழ் கிடைத்து விட்டாலும் அல்லது தணிக்கை குழுவையும் சரிக்கட்டி தவறான தகவல்களோடு அரசுக்கு எதிராக உள்நோக்கத்தோடு ஒரு மோசமான கருத்து திரைப்பட என்கிற தலையாய ஊடகத்தின் வழியே பரப்பப்பட்டால் அதனை தடுத்து நிறுத்தத்தானே வேண்டும்.

நீதிமன்றம்கூட, மக்களுக்கு விலையில்லாமல் தரப்படும் திட்டங்கள் சமூக நோக்கத்திலானது. அதற்கு எதிராக நாங்கள் எத்தகைய உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று ஏற்கனவே தீர்ப்பே தந்திருக்கும் நிலையில், அரசின் முத்திரை அச்சிடப்பட்ட மிக்சியை கொண்டு போய் நெருப்பில் போடுவது போல காட்சி அமைப்பதும் அதனையும் ஒரு தேசிய விருது பெற்ற மூத்த இயக்குநரே முன்னின்று செய்வதும் எவ்வகையில் நியாயம்?

கோடிகளில் புரளுகின்ற விஜய்க்கும், முருகதாசுக்கும் இலவசங்கள் இழிவாகத் தோன்றலாம். ஆனால் கலையுலகில் கால் பதித்து, வெற்றி பெற வேண்டும் என்கிற வேட்கையோடு கோடம்பாக்கம் வீதிகளில் அலைமோதிக் கொண்டிருக்கும், ஆயிரமாயிரம் இளைஞர்களுக்கு அம்மா உணவகம் என்பது ஒரு வகையில் தாய் மடி அல்லவா? மிக்சி, கிரைண்டர் என்பது இல்லாதோருக்கு இறைவனின் பரிசு போன்றதல்லவா?”  

”சரியான புரிதல் இல்லாமல் அரசாங்கத்துக்கு ஆலோசனை சொல்லி அலைகிற அரை வேக்காட்டு இயக்குநர் முருகதாசுக்கு ரஜினிகாந்த் அறிவுரை சொல்ல வேண்டுமே தவிர, அதைவிடுத்து கிணறு வெட்டின ரசீது என்கிட்ட இருக்குனு வடிவேலு காமெடியைப் போலத் தணிக்கை சான்றை சுட்டிக்காட்டி ஒரு படத்துக்கு சூப்பர் ஸ்டார் வக்காலத்து வாங்கலாமா” என்று நமது அம்மா கேள்வி எழுப்பியுள்ளது.

click me!