தனித்து போட்டியிடும் தைரியம் வந்துவிட்டது! ஏசியா நெட் ரிப்போர்ட்டை உறுதி செய்த கமல்!

By sathish kFirst Published Nov 11, 2018, 11:35 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் தைரியம் வந்துவிட்டதாக கூறியுள்ள கமல், கடந்த வாரம் ஏசியா நெட் இணையதளத்தில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டி என்று வெளியான செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.  

மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி வைக்க பெரிய அளவில் எந்த கட்சிகளும் ஆர்வம் காட்டவில்லை. தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியிலும் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இடமில்லை என்கிற சூழல் நிலவுகிறது. காங்கிரசும் தி.மு.கவிடம் இருந்து பிரிந்து வந்து கமலுடன் இணையும் வாய்ப்பு இல்லை. இந்த சூழலில் தான் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தனித்து போட்டி என்கிற வார்த்தையை பயன்படுத்த ஆரம்பித்தார்.

அதுவும் தனது பிறந்த நாளன்று வீட்டிற்கு வந்த நிர்வாகிகளுடன் இடைத்தேர்தலை தனித்து எதிர்கொள்ளலாம் என்றும் சாதகமான முடிவுகள் வந்தால் நாடாளுமன்ற தேர்தலையும் தனித்தே எதிர்கொள்ளலாம் என்றும் கூறியதாக ஆசியா நெட் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில் கமல் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு பயணத்தில் பிசியாக உள்ளார்.  

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் மக்களை சந்தித்து கமல் பேசினார். அப்போது தன்னை பார்க்க இவ்வளவு பேர் வந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். மேலும் தான் செல்லும் இடங்களில் எல்லாம் இளைஞர்களும், மாணவர்களும் பெரும் அளவில் திரள்வதாக கமல் தெரிவித்தார். இவற்றை எல்லாம் பார்க்கும் போது தேர்தலை தனித்தே எதிர்கொள்ள வேண்டும் என்கிற தைரியம் தனக்கு வருவதாக கமல் குறிப்பிட்டுள்ளார்.  

அதாவது தனித்து போட்டி என்கிற தனது முடிவுக்கு வலு சேர்க்கும் வகையில் மக்கள் ஆதரவு உள்ளதாக கமல் கூறியுள்ளார். இதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி என்கிற முடிவுக்கு கமல் வந்துவிட்டது தெரிகிறது.

click me!