திமுக முயற்சி தோல்வி? நயினாரிடம் நைசாக பேசி ஸ்டாலின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்ட முருகன்..!

By vinoth kumarFirst Published Jul 27, 2020, 4:52 PM IST
Highlights

பாஜகவின் தமிழக துணை தலைவரும், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தமிழக பாஜக தலைவர் முருகன் அவரை நேரில் சந்தித்து சமாதானப்படுத்தி உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

பாஜகவின் தமிழக துணை தலைவரும், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தமிழக பாஜக தலைவர் முருகன் அவரை நேரில் சந்தித்து சமாதானப்படுத்தி உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

அதிமுகவில் அமைச்சராக இருந்த  நயினார் நாகேந்திரன் டெல்லியில் பாஜக தலைவர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பின்னர், தமிழிசை சவுந்தர்ராஜன் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்தபோது அவர் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து தமிழக பாஜக தலைவர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவி வந்தது. இதில், நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் எல். முருகன் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனால், நயினார் நாகேந்திரன் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். 

இதனிடையே, நிர்வாகிகள் மாற்றத்திலாவது தனக்கு பொதுச்செயலாளர் போன்ற வலிமையான பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் மீண்டும் நயினார் துணைத் தலைவராகவே நியமிக்கப்பட்டிருக்கிறார். இது நயினார் நாகேந்திரனை மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கிடையில், திமுக துணைப் பொதுச்செயலராக இருந்த, வி.பி.துரைசாமி, பாஜகவில் இணைந்தார். அவரது வாயிலாக திமுகவில் உள்ள அதிருப்தியாளர்களுக்கு வலை விரிக்கப்பட்டது. அதேபோல், பாஜகவில் உள்ள அதிருப்தியாளர்களை இழுக்க வேண்டும் என மாவட்டச் செயலர்களுக்கு திமுக மேலிடம் உத்தரவிடப்பட்டது.

சமீபத்தில், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் வேதரத்தினம் மற்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்த, பாஜக நிர்வாகிகள் சிலர் திமுகவில் இணைந்தனர். இந்த வரிசையில் நயினார் நாகேந்திரனையும் இழுக்க தீவிர முயற்சி நடைபெற்று வந்தது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், நயினார் நாகேந்திரன் அதிருப்தியில் இருக்கிறார் என்ற தகவலறிந்து, திருநெல்வேலியிலுள்ள அவரது வீட்டிற்கே நேரடியாக சென்று முருகன் சந்தித்தார். அங்கேயே மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, சுமார் இரண்டு மணி நேரம் அவரை சமாதானப்படுத்தும் விதமாக பேசியுள்ளார். இந்த சந்திப்புக்கு பின் நயினார் நாகேந்திரன் திமுகவில் இணைய போகிறார் என்ற செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

click me!