என் வாழ்க்கை தியாகத்தால் ஆனது... அவர் வாழ்க்கையை பேசினால் அவமானம்... மு.க.ஸ்டாலின் சொல்கிறார்..!

Published : Feb 05, 2021, 09:26 PM IST
என் வாழ்க்கை தியாகத்தால் ஆனது... அவர் வாழ்க்கையை பேசினால் அவமானம்... மு.க.ஸ்டாலின் சொல்கிறார்..!

சுருக்கம்

பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைக்கு சென்றுள்ள என்னுடைய வாழ்க்கையே தியாகத்தால் ஆனதுதான். ஆனால், பழனிசாமியின் வாழ்க்கை வரலாற்றைப் பேசினால் தமிழகத்துக்குதான் அவமானம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ தேர்தல் பிரச்சாரம் கோவில்பட்டியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “தமிழகத்தில் இதுவரை இருந்த அரசுகளிலேயே ஊழல் மலிந்த அரசு என்றால், அது 1991 முதல் 96 வரை ஆட்சி செய்த அதிமுக ஆட்சிதான். ஆனால், இப்போது  நடக்கும் அதிமுக ஆட்சி, அந்த ஊழலையெல்லாம் தாண்டிய ஆட்சியாக மாறிவிட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல் எல்லா அமைச்சர்களும் ஊழல் ஒன்றையே தொழிலாகச் செய்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். முதல்வர் பழனிசாமிக்கு எதிரான டெண்டர் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் சிபிஐ வசம் ஒப்படைத்திருக்கிறது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக துணை முதல்வர் ஓபிஎஸ் மீதான வழக்கும் சிபிஐ வசம் ஒப்படைக்கலாமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், உதயகுமார், விஜயபாஸ்கர் என அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில்கூட ரூ.2,885 கோடிக்கு அவசரமாக ஒப்பந்தம் விட்டுள்ளனர். ஒப்பந்ததாரர்கள் தயவு செய்து ஏமார்ந்துவிட வேண்டாம். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் எல்லா ஒப்பந்தங்களையும் ரத்து செய்துவிடுவோம். அதனால் கமிஷன் கொடுத்து ஏமாற வேண்டாம். திமுக ஆட்சியில் கமிஷன் இல்லாமல் முறையாக நியாயமாக ஒப்பந்தம் வழங்கப்படும். ஊழலுக்காக ஊழல்வாதிகளால் நடத்தக்கூடிய ஊழல் கேபினட்தான் இது.


என்னைப் பொறுத்தவரை நடிக்க வேண்டிய அவசியமே கிடையாது. அந்தத் தேவையும் எனக்கு இல்லை. ஆட்சி முடியப்போவதால் விவசாயியாக நடிப்பது பழனிசாமிதானே தவிர நான் அல்ல. நான் உழைத்து தியாகம் செய்து அரசியலில் முன்னுக்கு வந்தவன். அது  நாட்டு மக்களுக்கு தெரியும். பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைக்கு சென்றுள்ள என்னுடைய வாழ்க்கையே தியாகத்தால் ஆனதுதான். ஆனால், பழனிசாமியின் வாழ்க்கை வரலாற்றைப் பேசினால் தமிழகத்துக்குதான் அவமானம். என்னை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது; அடிமைப்படுத்த முடியாது என பழனிசாமி சொல்கிறார். இதை டெல்லிக்கு சென்றபோது அவர் சொல்லியிருந்தால் பாராட்டலாம். தமிழகத்தையே அடமானம் வைத்துவிட்டு, பாஜகவின் பாதத்தை தாங்கிக்கொண்டிருக்கும்  பழனிசாமிக்கு, இதுபோன்ற வாய்சவடால், வசனங்கள் பேசவே உரிமை கிடையாது.
இன்னும் 3 மாதங்கள் மட்டுமே. பழனிசாமியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவோம். அதன் பின்னர் அமையக்கூடிய அரசு உண்மையான மக்களுக்கான நீங்கள் விரும்பக்கூடிய உங்கள் அரசாக இருக்கும்” என்று மு.க. ஸ்டாலின் பேசினார். 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!