
என் கணவர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் காவிரி நீர் எப்போதோ நம் தமிழகத்துக்கு வந்திருக்கும் என வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கூறியுள்ளார்.
சந்தனக் கடத்தல் வீரப்பன் கர்நாடக வனப்பகுதிகளில் மறைந்து வாழ்ந்து வந்தார். அவர் வனப்பகுதியில் இருக்கும்போது காவிரி நீர் தொடர்பான பிரச்சனையில், தமிழக மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.
மேலும் கர்நாடக மக்களிடமிருந்து தமிழக மக்களை காக்கும் வகையில் அவரது செயல்பாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது கணவர் உயிருடன் இருந்திருந்தால் காவிரி தண்ணீரை தமிழகத்துக்குள் கொண்டுவந்திருப்பார் என வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முத்து லட்சுமி, வீரப்பன் சட்டத்தை மீறி சந்தன மரத்தை வெட்டி கடத்துகிறான் என அபாண்டமாக என் கணவர் மீது பழி சுமத்தி, அவரை தண்டித்ததோடு மட்டுமல்லாமல் அவரை தமிழக அரசு கொன்றது என குற்றம்சாட்டினார்.
ஆனால் இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் இதுவரை மத்திய அரசும், மாநில அரசும் உச்சநீதிமன்ற தீர்ப்பை இன்னும் அமல் படுத்தவில்லை. சட்டத்தை மதிக்கமால் மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது. அவர்கள் சட்டத்தை மீறியது ஏன், இந்த அரசை தண்டிப்பது யார்? என மக்கள் கேட்கின்றனர்.
என் கணவர் உயிருடன் இருக்கும் போது கர்நாடகாவில் திருவள்ளுவர் சிலை அமைக்கவும், நதிகளை தேசிய மயமாக்கவும் போராடினார். அவர் மட்டும் இன்று உயிருடன் இருந்திருந்தால் காவிரி நீர் தமிழகத்துக்கு வந்திருக்கும் என முத்துலட்சுமி கூறினார்