எங்கப்பா எம்.ஜி.ஆர் மாதிரி... வெளியே வராமலே ஜெயிப்பார்... அதிமுகவை மிரட்டும் விஜயகாந்த் மகன்..!

By Thiraviaraj RMFirst Published Feb 3, 2021, 3:32 PM IST
Highlights

அமெரிக்காவில் இருந்துகொண்டு எம்ஜிஆர் வெற்றி பெற்றார். அதே போல கேப்டன் பேசவேண்டும், நடக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அவர் எங்கிருந்தாலும் வெற்றி பெறுவார். அவர் ஏற்கனவே பேச வேண்டிய பல காரியங்களை பேசிவிட்டார்.

உடனடியாக அதிமுக தங்களுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த அழைக்க வேண்டும் என பொறுமித் தள்ளினார் தேமுதிக பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா. ஒரு கட்டத்தில் 234 தொகுதிகளிலும் தேமுதிக தனித்து நிற்க தயார் என்றெல்லாம் பேசினார். ஆனால், அதிமுக அதனை கண்டுகொள்ளவில்லை. திமுகவின் கதவுகள் ஏற்கெனவே அடைக்கப்பட்டு விட்டன. இந்நிலையில்தான் தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் மூன்றாவது அணி அமைக்க தயாராக தேமுதிக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

திருச்சி மேலசிந்தாமணி அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ‘’மூன்றாவது அணி அமைக்க கேப்டன் தயாராக உள்ளார். மூன்றாவது அணியை வெற்றிபெறச் செய்ய வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அமெரிக்காவில் இருந்துகொண்டு எம்ஜிஆர் வெற்றி பெற்றார். அதே போல கேப்டன் பேசவேண்டும், நடக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அவர் எங்கிருந்தாலும் வெற்றி பெறுவார். அவர் ஏற்கனவே பேச வேண்டிய பல காரியங்களை பேசிவிட்டார்.

கேப்டனுடைய உடல்நிலை சரியில்லாததால் தேமுதிகவின் நிலை தேய்ந்து போகவில்லை, ஒடிந்து போகவில்லை. அவர் மீண்டும் வருவார். தேமுதிகவை குறித்து விமர்சனத்துக்கு நாங்கள் பதிலளிக்க விருப்பமில்லை. கூட்டணி குறித்து தொகுதி பங்கீடு குறித்து கட்சியின் தலைவர் தான் முடிவு எடுக்க வேண்டும். எனவே உங்கள் ஒவ்வொருவருடைய யூகங்களுக்கு எல்லாம் பதிலளிக்க முடியாது’’ எனத் தெரிவித்தார்.

click me!