மும்பை மாநகராட்சி தேர்தல்: சிவசேனா-பாஜக இடையே இழுபறி

 
Published : Feb 23, 2017, 10:07 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
மும்பை மாநகராட்சி தேர்தல்: சிவசேனா-பாஜக இடையே இழுபறி

சுருக்கம்

மும்பை மாநகராட்சி தேர்தலில் ஆட்சியை பிடிப்பதற்கு சிவசேனா - பாஜக இடையே இழுபறி ஏற்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 227 வார்டுகளில் சிவசேனா 84 வார்டுகளிலும், பாஜக 82 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

மும்பையை தவிர்த்து மற்ற 9 மாநகராட்சிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 5 மாநகராட்சிகளை பாஜக கைப்பற்றியுள்ளது.

10 மாநகராட்சிகள்

நாட்டிலேயே பண செல்வாக்கு மிக்க மாநகராட்சியாக மும்பை உள்ளது. இங்கு ஆண்டுக்கு 34 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பட்ஜெட் போடப்படுகிறது.

இந்நிலையில் மும்பை, தானே, உல்ஹாஸ்நகர், நாசிக், பூனே, பிம்ரி-சின்ச்வாட், சோலாப்பூர், அகோலா, அமராவதி, நாக்பூர் ஆகிய 10 மாநகராட்சிகளுக்கு கடந்த 21-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டது.

அரசியல் பிரபலங்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் என பல்வேறு தரப்பினர் இந்த தேர்தலில் வாக்களித்தனர்.

முறிந்த கூட்டணி

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் 55 சதவீத வாக்குகள் பதிவாகின. மேலும் இந்த தேர்தலில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த பாஜக - சிவசேனா கூட்டணி இந்த தேர்தலில் முறிந்தது.

இரு கட்சி தலைவர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி பிரசாரம் மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

பேச்சுவார்த்தை?

இதில் மொத்தம் 227 வார்டுகளைக் கொண்ட மும்பை மாநகராட்சியில் சிவசேனா 84 இடங்களை கைப்பற்றியது.

பாஜகவுக்கு 82 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் கட்சி 31 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 9 இடங்களிலும், மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா 7 இடங்களிலும் வெற்றி பெற்றன. மற்ற கட்சிகளுக்கு 14 இடங்கள் கிடைத்தன இருப்பினும், பெரும்பான்மையை பெற வேண்டும் என்றால் 114 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

இதனால், ஆட்சி அமைப்பது குறித்து சிவசேனா - பாஜ கட்சிகள் இடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5-ல் பாஜக

இதேபோன்று தானேவில் மொத்தம் உள்ள 131 இடங்களில் சிவசேனா 60 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ் 31 இடங்களிலும், பாஜக 21 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பூனேவில் மொத்தம் உள்ள 162 இடங்களில், 92-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று பாஜக தனிப் பெரும்பான்மை பெற்றிருக்கிறது.

இங்கு தேசியவாத காங்கிரஸ் 29 இடங்களிலும், சிவசேனா 11 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் வெற்றி பெற்றன. மொத்தத்தில் பூனே, நாசிக், உல்ஹாஸ்நகர், அகோலா, நாக்பூர் ஆகிய 5 மாநகராட்சிகளை பாஜக கைப்பற்றுவது என்பது உறுதியாகி விட்டது.

இறுதி அறிவிப்புகள்

இவற்றில் உல்ஹாஸ்நகரில் முன்பு தேசியவாத காங்கிரசும், நாசிக்கில் மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனாவும் ஆட்சியில் இருந்தன.

பல்வேறு இடங்களில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்ததால் இறுதிகட்ட முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்படவில்லை.

2012-ல் நிலவரம்

கடந்த 2012-மகாராஷ்டிராவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 10 மாநகராட்சிகளில் தேசியவாத காங்கிரஸ் அதிகபட்சமாக 265 வார்டுகளிலும், காங்கிரஸ் 264 வார்டுகளிலும், சிவசேனா 227 வார்டுகளிலும், பாஜக 205 வார்டுகளிலும் வெற்றி பெற்றிருந்தன.

இந்நிலையில் தற்போது நடைபெற்றுள்ள தேர்தலில் அனைத்து இடங்களையும் ஒப்பிடும்போது பாஜக கூடுதல் வார்டுகளை கைப்பற்றி உள்ளது. இவற்றில் பெரும்பாலான வார்டுகள் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் வசம் இருந்தவை.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு