
பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா வைக் காட்டிலும் மிகப்பெரிய தீவிரவாதி யாரும் இருக்க முடியாது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்மாயாவதி பதிலடி கொடுத்துள்ளார்.
சவுரி சவுரா என்ற இடத்தில் நேற்று முன் தினம் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா பேசுகையில், “ உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் இருக்கும்வரை மாநிலத்தில் வளர்ச்சி இருக்காது'' என்றார்.
இந்த மூன்று கட்சிகளையும், மும்பை தாக்குதல் தீவிரவாதி ‘கசாப்’ பெயருடன் ஒப்பிட்டு பேசினார். முதல் எழுத்தான கா என்றால் காங்கிரஸ், ச என்றால், சமாஜ்வாதி, ப-என்றால் பகுஜன் சமாஜ் என்று கூறி இருந்தார். அதற்கு பதிலடி கொடுத்து மாயாவதி பேசியுள்ளார்.
இந்நிலையில், அம்பேத்நகரில் நேற்று பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் மாயாவதி பேசினார்.
அவர் பேசுகையில், “ தேர்தல் வாக்குப்பதிவின் போது, வாக்காளர்கள் அனைவரும் உண்ணாவிரதம் இருங்கள், உங்களின் வேட்பாளர் வெற்றி பெற்றவுடன் அந்த உண்ணா விரதத்தை முடித்துக் கொள்ளுங்கள். பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சி அமைத்தால், வேலை வாய்ப்புகளை உருவாக்கி, வேலைவாய்ப்பு வழங்குவதில் உள்ள முறைகேடுகளை ஒழிப்போம்.
பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுவகைகள் மிகவும் தரம் குறைந்து காணப்படுகின்றன. அந்த உணவுகள் மாற்றி அமைக்கப்பட்டு, பால்,பிஸ்கெட், கேக், பழங்கள் வழங்கப்படும். சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்படும் என்றார்.
பாரிச் என்ற இடத்தில் தேர்தல் பிரசாரத்தில் மாயாவதி பேசுகையில், “ என்னுடைய தேர்தல் பிரசாரக் கூட்டம் மோடியின் கூட்டத்தைக் காட்டிலும் பெரிதானது. இதில் இருந்தே அடுத்த ஆட்சி பகுஜன் சமாஜ் கட்சிதான் அமைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா வைக் காட்டிலும் மிகப்பெரிய தீவிரவாதி யாரும் இருக்க முடியாது.
மத்தியில் பாரதிய ஜனதா, மாநிலத்தில் சமாஜ்வாதி ஆகிய அரசுகளின் தவறான கொள்கைகளால் மக்களிடையே வெறுப்பு வந்துவிட்டது. பகுஜன் சமாஜ் கொண்டு வந்த நல்ல திட்டங்களின் பெயரை சமாஜ்வாதி மாற்றிவிட்டது.
முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் 99 பேருக்கும் இந்த முறை வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் இடஒதுக்கீடு முறையை ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதாவும் முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளன. மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு முறை திறனற்றுபோய்விடும்'' என்றார்.