மோடி அரசின் முடிவால் முல்லை பெரியாறு அணை தப்பிச்சது... புட்டுப் புட்டு வைத்த தமிழக பாஜக..!

By Asianet TamilFirst Published Dec 3, 2021, 10:02 PM IST
Highlights

திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் அரசு இதே மசோதாவை கொண்டு வந்தபோது அந்தந்த மாநிலங்களில் உள்ள அணைகளுக்கு அந்த மாநில அரசுகளே என்று குறிப்பிட்டிருந்த நிலையில், பாஜக அரசு, அணைகளுக்கு சொந்தமான மாநிலங்களே பொறுப்பு என்று இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த அணை பாதுகாப்பு மசோதா சட்டமாகியிருந்தால்,  முல்லைப்பெரியாறு அணையை கேரள அரசு கட்டுப்பாட்டில் எடுத்திருக்கும் என்று தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நிறைவேற்றிய அணை பாதுகாப்பு மசோதா ஏன் கொண்டு வரப்பட்டது என்று தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “அணை பாதுகாப்பு மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளதையடுத்து நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு சட்டம் நிறைவேறியுள்ளது. 1979-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று பெய்த கனமழையால் குஜராத்தின் மோர்பியில் உள்ள மச்சு ஆற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் காரணமாக மச்சு அணை உடைந்து அருகே உள்ள கிராமங்களில் வெள்ள நீர் புகுந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியான சோகத்தை விவரிக்க வார்த்தைகளில்லை. மச்சு அணை உடைப்பு நிகழ்வு மிகவும் மோசமான ஒன்று என கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அணைகளின் பாதுகாப்பு குறித்து எந்த விதமான சட்ட, விதிமுறைகளும் இல்லாத நிலையில் பல்வேறு முயற்சிகளுக்கு பின் பொதுநலன் கருதி அணை பாதுகாப்பு மசோதா சட்டமாக்கப்பட்டுள்ளது.
 
'தண்ணீர்' மாநில பட்டியலில் இருப்பதால் இந்த சட்டம் மாநில உரிமைகளை பறிக்கிறது என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது. எந்த விதத்திலும் மாநில உரிமைகளில் இந்த சட்டமானது தலையிடவில்லை என்பதே உண்மை. இச்சட்டத்தின்  படி  உருவாக்கப்படும் தேசிய அணை பாதுகாப்பு குழு மற்றும் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம், நாடு முழுதும் அணைகள் பாதுகாப்பு குறித்த பொதுவான கொள்கைகளை வகுத்து, அவை  அமல்படுத்தப்படுவதை உறுதி செய்து, தொழில்நுட்ப ரீதியிலான ஆலோசனைகளையும் வழங்கும்.மாநில அணை பாதுகாப்பு அமைப்புகள்  மற்றும் அணையின் உரிமையாளர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் நிலையில், அவைகளை களைந்து அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்.
 
மாநில அணை பாதுகாப்பு குழுக்கள்  மற்றும் மாநில அணைகள் பாதுகாப்பு அமைப்புகள்  உருவாக்கப்படும். அணைகளின் பாதுகாப்பு குறித்து தேசிய குழு மற்றும் ஆணையம் பரிந்துரைக்கும்  அனைத்து நடவடிக்கைகளையும், செயல்பாடுகளையும் மாநில அமைப்புகளே மேற்கொள்ளும் என்று தெளிவாக சொல்கிறது இந்த சட்டம். அணைகளின் குறைபாடுகள், ஆபத்துகள் குறித்த விவரங்களையும், அணைகளின் பாதுகாப்பு குறித்த அனைத்து புள்ளி  விவரங்களையும் தேசிய ஆணையத்திற்கு தேவைப்படும் சூழ்நிலையில் தெரியப்படுத்த வேண்டும்.
மேலும், திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் அரசு இதே மசோதாவை கொண்டு வந்தபோது அந்தந்த மாநிலங்களில் உள்ள அணைகளுக்கு அந்த மாநில அரசுகளே என்று குறிப்பிட்டிருந்த நிலையில், பாஜக அரசு, அணைகளுக்கு சொந்தமான மாநிலங்களே பொறுப்பு என்று இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த மசோதா சட்டமாகியிருந்தால்,  முல்லைப்பெரியாறு அணையை கேரள அரசு கட்டுப்பாட்டில் எடுத்திருக்கும். ஆனால், பாஜக அரசு கொண்டுவந்துள்ள சட்டப்படி, தமிழகத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். அதாவது,  பிற மாநிலங்களில் இருக்கும் நம் அணைகள் அனைத்தும் நம் மேற்பார்வையிலேயே, கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்பதை உறுதி செய்துள்ளது.  நம் அணைகளை நம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு,  பல்வேறு திட்டங்களை, சட்டங்களை, விதிகளை, கொள்கைகளை உருவாக்கி அமல்படுத்துவதன் மூலம் அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்து, பேரிடர் காலங்களில் மக்களின் உயிர் காக்கும் முக்கிய சட்டத்தை வரவேற்று ஆதரவளிப்பதை விடுத்து எதிர்ப்பது மக்கள் விரோத செயலே.” என்று நாராணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பாஜக அரசை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

tags
click me!