’உங்க ஆட்சியை காப்பாற்ற மட்டும் வேணும்... ஆனா நாங்க பிச்சை எடுக்கணுமா..?’ பாஜகவை கொந்தளிக்க வைத்த தம்பிதுரை..!

By Thiraviaraj RMFirst Published Feb 11, 2019, 5:20 PM IST
Highlights

மக்களவையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய தம்பிதுரை, பாஜக அரசின் செயல்பாடுகளை கிழித்து தொங்கவிட்டார். 
 

மக்களவையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய தம்பிதுரை, பாஜக அரசின் செயல்பாடுகளை கிழித்து தொங்கவிட்டார். 

பாஜக அதிமுக கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை சந்திக்கும் என இரு கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் கூறி வரும் நிலையில், பாஜகவையும், பிரதமர் மோடியின் செயல்பாடுகளைகளையும் பகிரங்கமாக எதிர்த்து கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார் மக்களவை துணை சபாநாயகரான தம்பிதுரை.  இந்நிலையில் இன்றும் மக்களவையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர், இடைக்கால நிதிநிலை அறிக்கையில் பெரிய அளவில் சலுகைகளை அறிவித்தது சரியல்ல. இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையானது, தேர்தல் அறிக்கை போல் இருக்கிறது. 

பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட 6000 ரூபாய் உதவித்தொகை போதாது. குறைந்தபட்சம் 12 ஆயிரம் ரூபாயாவது வழங்க வேண்டும். தற்போது அறிவித்த சலுகைகளை ஏன் 2018 ஆம் ஆண்டு அறிவிக்கவில்லை? மாநில அரசின் உரிமைகளை பறிப்பதில் காங்கிரஸ் அரசுக்கும் பாஜக அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. 

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு, குறு தொழிலாளர்களுக்கு என்ன நன்மை கிடைத்தது? ஜிஎஸ்டி மூலம் மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்துவிட்டது. ஜிஎஸ்டி வரி வசூலில் தங்கள் பங்கைப் பெறுவதற்கு, மத்திய அரசிடம் மாநில அரசுகள் பிச்சையெடுக்கும் நிலை உள்ளது. மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை முறையாக மத்திய அரசு அளிக்கவில்லை. இதுதான் கூட்டாட்சி தத்துவமா? 

தானே, வர்தா, ஒகி, கஜா என பல புயல்களால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரண நிதி முழுமையாக வழங்கப்படவில்லை. வாக்கெடுப்புகளில் மத்திய அரசு மீது நம்பிக்கை வைத்து பலமுறை வாக்களித்தோம். ஆனால், எங்கள் அரசு மீது மத்திய அரசு நம்பிக்கை வைக்கவில்லை. பாஜகவின் பல்வேறு திட்டங்கள் தோல்வி அடைந்துள்ளன. 100 நாள் வேலைத் திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என மக்கள் குறை கூறுகிறார்கள். 

100 நாள் வேலை திட்டத்தின் கொள்கையை மாற்றி அமைத்தது தோல்வியில் முடிந்துள்ளது. சிறுபான்மையினர் நலனுக்காக போதிய நிதி ஒதுக்கவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் வேலைவாய்ப்பை அதிகரிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை, 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பு திண்டாட்டம் அதிகரித்துள்ளது’’  என அவர் பேசினார். இதை சற்றும் எதிர்பார்க்காத பாஜகவினர் கொந்தளித்து உடனே பேச்சை நிறுத்த வேண்டும் என்று கூக்குரலிட்டனர். தம்பிதுரையின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் கடும் அமளியிலும் ஈடுபட்டனர். 

தம்பிதுரை தொடர்ந்து பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருவதால் அதிமுக- பாஜக கூட்டணி ஏற்படுமா? என்கிற சந்தேகம் வலுத்து வருகிறது. 

click me!