‘இன்னும் பத்தே நாட்களில் நிலைமை கைமீறி விடும்’... தமிழக அரசுக்கு எம்.பி. சு.வெங்கடேசன் எச்சரிக்கை...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 29, 2021, 4:30 PM IST
Highlights

மதுரையில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தாவிடில் தனியார் மருத்துவமனைகள் 5 நாட்களிகளுக்கும், அரசு மருத்துவமனைகள் 10 நாட்களுக்கும் மட்டுமே தாக்கு பிடிக்கும் என எம்.பி. சு.வெங்கடேசன் தமிழக அரசை எச்சரித்துள்ளார். 

தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களை கடந்து பிற மாவட்டங்களிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மதுரையில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தாவிடில் தனியார் மருத்துவமனைகள் 5 நாட்களிகளுக்கும், அரசு மருத்துவமனைகள் 10 நாட்களுக்கும் மட்டுமே தாக்கு பிடிக்கும் என எம்.பி. சு.வெங்கடேசன் தமிழக அரசை எச்சரித்துள்ளார். 

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவிட் -19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில் வரப்போகும் நாள்களில் மதுரையின் நிலை என்னவாக இருக்கப்போகிறது என்பதைச் சிந்தித்து மாவட்ட நிர்வாகம் கூடுதல் முனைப்போடு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.  

ஏப்ரல் 28ஆம் தேதி வரையிலான புள்ளிவிபரங்களின் அடிப்படையில் பார்ப்போமேயானால் தற்போது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை 1068, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை 1047, வீட்டுத்தனிமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1105 ஆகும்.

கடந்த பத்து நாள்களின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் அடுத்த பத்து நாள்கள் எப்படி இருக்கும் எனக் கணித்தோமேயானால் மே 5ஆம் தேதியுடன் தனியார் மருத்துவமனையின் அனைத்துப் படுக்கைகளும் நிரம்பிவிடும். மே 9 அல்லது 10ஆம் தேதியோடு அரசு மருத்துவமனையின் அனைத்து படுக்கைகளும் நிரம்பிவிடும் சூழல் உள்ளது.
நிலைமையைக் கைமீறவிடாமல் தடுப்பதற்கான அனைத்து வழிகளையும் நாம் முயற்சி செய்ய வேண்டும்.

குறிப்பாக மாவட்ட நிர்வாகம் கோவிட் பரிசோதனைகளை அதிகப்படுத்துவது அடிப்படையான பணி. அவற்றில் போதிய அளவு முன்னேற்றமில்லை.  நமக்கு ஈடான மக்கள்தொகையைக் கொண்ட கோவை மாவட்டத்தில் தினசரி பரிசோதனை அளவு 10 ஆயிரமாக இருக்கிறது. ஆனால் நாம் இன்னும் 7 ஆயிரத்திலேயே இருக்கின்றோம். தொற்றாளர்களை அதிகமாகவும் விரைவாகவும் கண்டறிந்து மருத்துவ நடவடிக்கைக்கு உட்படுத்துவதுதான் நோய்ப்பரவலைத் தடுப்பதற்கான அடிப்படைப்பணி. எனவே மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் உடனடியாக தினசரி பரிசோதனையின் அளவை 15 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.

அதேபோல மதுரையில் இயங்கும் அனைத்து வகையான சந்தைகளிலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த, ஒழுங்கமைக்க தனிப்பட்ட கவனம் செலுத்தப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட வியாபாரிகளிடம் நிர்வாகிகளிடம் பேசி உரிய முடிவுகளை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, அரசு சொல்லியிருக்கும் அனைத்து வகையான கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்கத் தீவிரமாக முயற்சி எடுக்க வேண்டும்.

மதுரை கோவிட் கால நெருக்கடியை மிகச்சரியாக கையாண்டு மீண்டது என்ற நிலையை உருவாக்க அனைத்து தரப்பினரின் முழு ஒத்துழைப்பும் செயல்பாடும் தேவை. அதற்கு மாவட்ட நிர்வாகம் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

click me!