ஒரே ஒரு பெண் மட்டும்.. மீதி 31 பேரும் ஆண்கள் தான்.. எங்கள் உரிமையை யார் தீர்மானிப்பது..? கடுப்பான கனிமொழி.

Published : Jan 03, 2022, 06:51 PM ISTUpdated : Jan 03, 2022, 06:52 PM IST
ஒரே ஒரு பெண் மட்டும்.. மீதி 31 பேரும் ஆண்கள் தான்.. எங்கள் உரிமையை யார் தீர்மானிப்பது..? கடுப்பான கனிமொழி.

சுருக்கம்

பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மசோதாவை ஆய்வு செய்யும் 31 எம்.பி.க்கள் கொண்ட நாடாளுமன்றக் குழுவில் ஒரு பெண் எம்.பி. மட்டுமே இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் இதுக்குறித்து பெண்கள் உரிமையையும், ஆண்களே தீர்மானிக்கின்றனர் என்று எம்.பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.   

பெண்களின் திருமண வயதை உயர்த்தி, அதை 21 வயதென்று நிர்ணயிக்கும் மசோதா, பல தரப்பிலிருந்து பாராட்டுகளையும் எதிர்ப்புகளையும் பெற்ற நிலையில் தற்போது பரிசிலனைக்காக நாடாளுமன்ற ஆய்வுக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலைக்குழுவின் தலைவராக பாஜக மூத்த தலைவர் வினய் சஹாஸ்ரபுத்தே நியமிக்கப்பட்டுள்ளார். 31 எம்.பி.க்கள் கொண்ட குழுவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுஷ்மிதா தேவ் என்ற பெண் எம்.பி. மட்டுமே இடம் பெற்றுள்ளார். மீதமுள்ள 30 எம்.பி.க்களும் ஆண்கள். அதாவது பெண்ணின் திருமண வயதை உயர்த்துவது குறித்துப் பரிசீலிக்கவும், ஆய்வு செய்யவும் இருக்கும் நிலைக்குழுவில் பெண்கள் குறித்த பிரச்சினைகளைப் பேச பெண்களுக்கான பிரதிநிதித்துவமே இல்லை என்பது தற்போது விவாத பொருளாக மாறி இருக்கிறது.

இதுதொடர்பாக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்தியாவில் 110 பெண் எம்.பி.க்கள் இருக்கிறார்கள். ஆனால், இந்தியாவின் ஒட்டுமொத்த இளம் பெண்கள் தொடர்பான மத்திய அரசின் ஒரு முக்கிய முடிவில், அவர்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதற்கான நாடாளுமன்ற ஆய்வுக்குழுவில் 30 ஆண் எம்.பி.க்களுடன் ஒரேயொரு பெண் எம்.பி. மட்டுமே உள்ளார். பெண்களுக்கான உரிமையைத் தொடர்ந்து ஆண்களே தீர்மானித்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே தொடர்கிறார்கள்" என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது தற்போது 18 ஆக இருக்கும் நிலையில், அதை மேலும் மூன்று ஆண்டுகள் உயர்த்தும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நடந்து முடிந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் குழந்தைத் திருமணத் தடைத் திருத்தச் சட்டம் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்த மசோதாவை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தாக்கல் செய்து பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதைச் சட்டமாக்க முன்மொழிந்தது. நாடாளுமன்றத்தில் மக்களின் கருத்தினை கேட்க வேண்டும் என்று தொடர் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி, கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. 

பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் சட்டம் அமலுக்கு வந்தால் அனைத்து சமூகத்துக்கும் இது பொருந்தும். ஏற்கெனவே இருக்கும் சட்டம் செல்லாததாகும். இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம், பார்ஸி திருமணம் விவகாரத்துச் சட்டம், முஸ்லிம் தனிநபர் சட்டம், சிறப்பு திருமணச் சட்டம், இந்து திருமணச் சட்டம், வெளிநாடு திருமணச் சட்டம் போன்றவற்றிலும் திருத்தம் கொண்டுவரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!
பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!