தமிழகத்தில் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா ? கேட்டா அசந்து போயிடுவீங்க !!

By Selvanayagam PFirst Published Apr 17, 2019, 9:23 PM IST
Highlights

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் திமுக, அதிமுக மற்றும் அமமுக போன்ற கட்சிகள் வாக்காளர்களுக்கு 2430 கோடி ரூபாய் கொடுத்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலோடு 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மினி சட்டமன்ற இடைத் தேர்தலும் நடப்பதால் மத்திய ஆட்சி, மாநில ஆட்சி இரண்டுக்குமான பரீட்சையாக அமைந்திருக்கிறது இந்தத் தேர்தல். வாக்குக்கு பணம் என்பது வெளிப்படையாக எல்லோராலும் கண்டிக்கப்பட்டாலும், இன்னொரு பக்கம் பெரும்பாலான கட்சிகள் வாக்குக்கு பணம் கொடுப்பதை தேர்தல் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாகவே வைத்திருக்கின்றன.

கடந்த 8 ஆண்டுகளாக  ஆளுங்கட்சியாக இருப்பதால் அதிமுக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறது என்ற புகார் மிகப் பரவலாக எழுந்திருக்கிறது. துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்டியிடும் தேனியில் ஆரம்பித்து பல தொகுதிகளில் பணப்பட்டுவாடா வெளிப்படையாகவே நடந்திருக்கிறது.

அதிமுக சார்பில் முதலில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் 10 லட்சம் வாக்காளர்களுக்கு 500 ரூபாய் கொடுப்பதாக திட்டமிடப்பட்டது. ஆனால் தேர்தல் நெருங்க, நெருங்க களத்தின் நிலையை உணர்ந்த அதிமுக மேலிடம் 500 வேண்டாம் 300 ரூபாய் போதும் என்று முடிவெடுத்துவிட்டதாக கூறப்படுகிறது..

இதன்படி கணக்குப் பார்த்தால் அதிமுக சார்பில் ஒரு மக்களவைத் தொகுதிக்கு 30 கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆக அதிமுக போட்டியிடும் 20 தொகுதிகளுக்கும் சேர்த்தால் மொத்தம் 600 கோடி ரூபாய் ஆகிறது.

இதே போல் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அதிகபட்சம் ஒரு லட்சம் பேருக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் வாரி வழங்கியிருக்கிறது அதிமுக. அதன்படி ஒரு தொகுதிக்கு 20 கோடி ரூபாய் ஆகிறது. 18 தொகுதிக்கும் கணக்குப் பார்த்தால் 360 கோடி ரூபாய். ஆக அதிமுகவின் உத்தேச வாக்காளர் பண செலவு 960 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதே போல் திமுக சார்பில் ஒரு மக்களவைத் தொகுதிக்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி பார்த்தால் பத்து லட்சம் வாக்காளர்களுக்கு தலா 100 அளிக்க முடிவு செய்திருக்கிறது அக்கட்சி. இதுவும் அக்கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளுக்குமான கணக்கு அல்ல. விஐபி வேட்பாளர்களுக்கு இது கூட போய் சேரவில்லை. ஆனால் திமுகவின் அனைத்து வேட்பாளர்களும் சராசரியாக ஓட்டுக்கு 200 ரூபாய் கொடுப்பதாக வைத்துக் கொண்டால் தொகுதிக்கு 20 கோடி வருகிறது. அதன்படி 20 தொகுதிகளுக்குக் கணக்கிட்டால் மொத்தம் 400 கோடி ரூபாய்.

சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக ஓரு ஓட்டுக்கு 500 ரூபாய் வீதம் ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு வழங்குகிறது என்பது கணக்கு. அதன்படி ஒரு தொகுதிக்கு 5 கோடி ரூபாய். 18 தொகுதிகளுக்கும் கணக்கிட்டால் 90 கோடி ரூபாய். ஆக திமுகவின் மொத்த செலவு 490 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது..

அமமுக சார்பில் மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் இடைத் தேர்தல்களில் 580 கோடி ரூபாய்  செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது மொத்தம் திமுக, அதிமுக மற்றும் அமமுக சார்பில் தமிழக வாக்காளர்களுக்கு  மொத்தம் 2 ஆயிரத்து 30 கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு கொடுக்கிற பணம் மட்டுமே வருகிறது. 

காங்கிரஸ்  மற்றும் பாஜக சார்பில் ஒருசில இடங்களில்  பணம் கொடுக்கப்பட்டிருக்கலாம். ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் சற்று செழிப்பாக கவனிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கட்சிகளின்  கணக்கு 400 கோடி ரூபாய் என்று வைத்துக் கொண்டால் கூட தமிழகத்தில் இந்த தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட பணம் சுமார் 2,430 கோடி ரூபாய்  என தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது.

click me!