
பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சீனா செல்லவுள்ளார்.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் 9-வது பிரிக்ஸ் மாநாடு சீனாவின் புஜியான் மாகாணத்தில் செப்டம்பர் 3 முதல் 5-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் இந்தியா சார்பாக பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மியான்மருக்கு வருமாறு அந்நாட்டு அதிபர் யு ஹிதின் காவ் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்று மோடி வரும் 5-ந்தேதி மியான்மருக்கு செல்கிறார். 7-ந்தேதி வரை அங்கிருக்கும் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இந்த பயணத்தின்போது, மியான்மர் வெளியுறவு அமைச்சர் ஆங் சான் சூ கியுடனும், அதிபர் ஹிதின் காவுடனும் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார். யாங்கோன், பாகன் நகருக்கும் மோடி செல்லவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே சிக்கிம் எல்லையில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக மோதல் நீடித்து வந்தது. மோடி சீனா செல்லவுள்ள நிலையில், டோக்லாம் பகுதியில் இரு நாடுகளும் தங்களது படைகளை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளன.