
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் ஏன் இன்னும் கூட்டப்படாதது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் மத்திய அரசுக்கு சராமரி கேள்வி கேட்டு, துளைத்தெடுத்துள்ளார்.
கர்நாடக மூத்த பத்திரிகையாளரும், முற்போக்கு சிந்தனையாளரும், இந்து வலது சாரி இயக்கத்துக்கு எதிராக எழுதி வந்தவரான கவுரி லங்கேஷ் கடந்த செப்டம்பர் மாதம் மர்மநபர்களால் அவர் வீட்டு முன்சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதைத் தொடர்ந்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், பா.ஜனதா கட்சிக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். பிரதமர் மோடியை பேஸ்புக்கில் பின்தொடர்பவர்கள்தான் கவுரி லங்கேஷ் கொலையை ரசிக்கிறார்கள்.
பிரதமர் மோடி சிறந்தநடிகர் என்று விமர்சித்து இருந்தார். அதைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பா.ஜனதா கட்சியை குறித்து கடுமையாக நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத் தொடர் இன்னும் ஏன் தொடங்கவில்லை எனக் கேட்டு டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் பதிவிட்டு இருப்பதாவது-
குளிர்காலக் கூட்டத்தொடர் ஏன் இன்னும் நடக்கவில்லை? என்று கேள்வியுடன் தொடங்குகிறார். அதற்கு காரணமாக,
குளிர்காலம் இன்னும் தொடங்காததால் குளிர்காலக்கூட்டத்தொடர் நடத்தவில்லையா? அல்லது, பிரதமர் மோடி வேறு எங்கேனும் ‘பிஸி’யாக இருக்கிறாரரா? அல்லது நாட்டில் நிலவும் பிரச்சினைகள் குறித்து குஜராத் ேதர்தலுக்கு முன் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினால் பதில் சொல்வது வெட்கமாக இருக்குமா? அல்லது இன்னும் காலநிலை வெப்பமாக இருக்கிறதா?.
ஒருவேளை குளிர்காலக்கூட்டத்தொடர் அடுத்த ஆண்டுதான் நடத்தப்படுமா?. இவ்வாறு பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.