1988 லியே டிஜிட்டல் கேமரா, இண்டர்நெட் பயன்படுத்தினாரா பிரதமர் ! வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்ட மோடி !!

By Selvanayagam PFirst Published May 13, 2019, 10:34 PM IST
Highlights

பிரதமர் மோடி நியூஸ் நேஷன் என்ற தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த நேர்காணலில் 1988-இல்,  தான் டிஜிட்டல் கேமிரா பயன்படுத்தியதாகவும்  அந்த காலத்தில் மின்னஞ்சலை முதன் முதலாக பயன்படுத்திய சிலருள் தானும் ஒருவன் என்றும் பேசி மாட்டிக் கொண்டார்..
 

பிரதமர் மோடி நியூஸ் நேஷன் என்ற தொலைக்காட்சி சேனலுக்கு பிரத்யேக நேர்காணல் கொடுத்திருந்தார். இந்த நேர்காணலில் பிரதமர் மோடி பேசியது சமூக வலைதளங்களில் தற்போது டிரெண்டிங் ஆக தொடங்கியது. 

அந்த நேர்காணலில் பாலாகோட் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி விவரித்தது நேற்று  டிரெண்டிங் ஆனது. பாலாகோட் தாக்குதல் குறித்து அந்த பேட்டியில் விவரித்த பிரதமர் மோடி, "பாலாகோட் தாக்குதல் சம்பவ நாளன்று காலநிலை திடீரென்று மோசமாக மாறியது.



கரு மேகங்களுடன் மழை பெய்யத் துவங்கியது. எனவே இத்தகைய சூழ்நிலையில் மேகங்களின் ஊடாக விமானங்களைச் செலுத்தி தாக்குதல் நடத்தலாமா என்று சந்தேகம் தோன்றியது.

 அதுதொடர்பான ஆய்வின் போது தாக்குதல் சம்பவத்தின் தேதியை மாற்றலாமா என்பதுதான் அங்கிருந்த நிபுணர்களின் கருத்தாக இருந்தது.  எனது மனதில் இரண்டு பிரச்னைகள் இருந்தன. முதலாவது தாக்குதல் சம்பவம் தொடர்பான ரகசியத்தன்மை; இரண்டாவதாக... நான் அறிவியல் பெரிதாக தெரிந்திராதவன் என்று நான் அவர்களிடம் சொன்னேன். நிறைய மேகமும் மழையும் உள்ளது. அதன் மூலம் ஒரு லாபம் உள்ளது. மேகங்கள் மூலம் நமக்கு நன்மை கிடைக்குமென்று என் மூல அறிவு சொல்கிறது. நாம் பாகிஸ்தான் ரேடாரின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்கலாம். எல்லோரும் அங்கு குழம்பினார்கள். ஆனால், 'இப்போது மேகங்கள் இருக்கிறது.. நாம் தொடரலாம்' என்று நான் கூறினேன்" என்றார். 

அதாவது, மேகம்மூட்டமாக இருப்பதால் பாகிஸ்தான் ரேடார் கண்காணிப்பில் இருந்து இந்திய விமானப் படை விமானங்கள் தப்பித்துவிடலாம் என்ற பிரதமர் மோடியின் கருத்து கடுமையான விமரிசனத்துக்குள்ளானது. இதனால், நேற்றைய பொழுது முழுவதும் பிரதமர் மோடியின் 'மேகமூட்ட யுத்தி' சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆனது. 

இந்த நிலையில், அதே நேர்காணலின் மற்றொரு பகுதி இன்று டிரெண்டிங் ஆகி வருகிறது. அந்த பகுதியில் பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை கலர் ஃபோட்டோ எடுப்பதற்காக 1988-இல் தான் டிஜிட்டல் கேமிரா பயன்படுத்தியதாக தெரிவிக்கிறார். மேலும், அந்த காலத்தில் மின்னஞ்சலை முதன் முதலாக பயன்படுத்திய சிலருள் தானும் ஒருவன் என்ற வகையிலும் அவர் தெரிவித்தார். 

நேர்காணலின் குறிப்பிட்ட இந்த பகுதி தற்போது டிரெண்டிங் ஆகி வருகிறது. டிவிட்டர்வாசிகள் உண்மைத் தகவல்களையும் சேகரித்து பிரதமர் மோடி பேசிய நேர்காணல் விடியோவுடன் இணைத்து கலாய்த்து வருகின்றனர். அதாவது, டிஜிட்டல் கேமிராக்கள் 1990-இல் தான் சந்தை பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால் பிரதமர் மோடி 1988-ஆம் ஆண்டு என தவறாக குறிப்பிட்டார்.

மேலும், பிரதமர் மோடி குறிப்பிட்ட காலகட்டத்தில் மின்னஞ்சலும் வெகுஜன பயன்பாட்டுக்கு வரவில்லை.  இதன்மூலம், இந்த நேர்காணலின் இந்த பகுதியை குறிப்பிட்டு டிவிட்டர்வாசிகள் விமரிசனம் செய்தும் கலாய்த்தும் வருகின்றனர். 

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி தான் பொய்யர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

click me!