ஹலோ நான் காவலாளி பேசுறேன் !! 25 லட்சம் வாட்ச் மேன்களிடம் பேசும் மோடி !!

By Selvanayagam PFirst Published Mar 20, 2019, 8:45 AM IST
Highlights

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக  இன்று நாடு முழுவதிலும் உள்ள 25 லட்சம் வாட்ச் மேன்களிடம் பிரதமர் மோடி பேசுகிறார். கடந்த சில நாட்களாக மோடி தன்னை சவுகிதார்  அதாவது நாட்டின் காவலாளி என்று அழைத்து வரும் நிலையில், இன்று அவர்  25 லட்சம் வாட்ச் மேன்களிடம் உரையாடுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க  ஆரம்பித்துள்ளது.  ரபேல் ஒப்பந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். ‘காவலாளி ஒரு திருடன்’ என்று விமர்சித்தார்.
  
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நானும் காவலன்தான்’ என்கிற புதிய பிரசார வீடியோவை வெளியிட்டார்.

மேலும் அந்த பதிவில் ‘‘உங்கள் காவலன் தேசத்துடன் துணை நிற்கிறார். நான் தனி ஆள் கிடையாது. யாரெல்லாம் ஊழல், சமூக கொடுமைகளை எதிர்த்து போராடுகிறார்களோ அவர்கள் எல்லோரும் காவலன்தான்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் நானும் காவலாளிதான் என்ற பிரசாரத்தை நடத்துமாறு பாஜகவினருக்கு மோடி அழைப்பு விடுத்தார். அதன்படி, அவர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் , பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் தங்கள் பெயருக்கு முன்னால் ‘சவுகிதார்’ என்று சேர்த்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி நாடு முழுவதும், வாட்ச்மேன்களாக பணியாற்றும் சுமார் 25 லட்சம் காவலாளிகளிடையே இன்று உரையாற்றுகிறார். ஆடியோ வசதியில் அவர் பேசுகிறார். ஹோலி பண்டிகையை முன்னிட்டு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ‘நானும் காவலாளிதான்’ பிரசாரத்தில் இணைந்த பொதுமக்களுடன் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சி, 31–ந் தேதி நடக்கிறது. 500 இடங்களில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இத்தகவல்களை பா.ஜனதா ஊடகப்பிரிவு பொறுப்பாளர் அனில் பலுனி தெரிவித்தார்.

click me!