காத்திருக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்..! கரை சேர்வாரா, கழற்றிவிடப்படுவாரா?

By Asianet TamilFirst Published Mar 20, 2019, 8:05 AM IST
Highlights

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகும் என அக்கட்சித் தலைவர் அழகிரி அறிவித்துள்ள நிலையில், முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு சீட்டு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்டது. பெரும்பாலான கட்சிகள் தங்கள் கட்சிகளின் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டன.  தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் மட்டுமே இன்னும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது. 
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடக்கம் முதலே ஈரோட்டில் போட்டியிட முயற்சி செய்துவந்தார். ஓரிறு மாதங்களுக்கு முன்பே அந்தத் தொகுதியில் தேர்தல் பணியை இளங்கோவன் தொடங்கியிருந்தார். ஆனால், அந்தத் தொகுதியை, திமுக கூட்டணியில் உள்ள மதிமுக தட்டிச் சென்றுவிட்டது. இதனால், அதிருப்தியில் இருந்துவரும் இளங்கோவன், வெற்றி வாய்ப்புள்ள ஒரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்து டெல்லியில் காய் நகர்த்திவருகிறார். 
இது குறித்து இளங்கோவன் ஆதரவாளர் ஒருவர் நம்மிடம் பேசியபோது, “சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி இல்லை என்றவுடன் பெரும்பாலான தலைவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொண்டனர். காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டபோது முதல் ஆளாகத் தேர்தலில் போட்டியிட முன்வந்தவர் இளங்கோவன். இந்த முறை கூட்டணி அமைந்துள்ள நிலையில், அவருக்கு நிச்சயமாக சீட்டு ஒதுக்கியே தீர வேண்டும். இளங்கோவன் விரும்பிய ஈரோடு, திருப்பூர் தொகுதிகள் கூட்டனி கட்சிக்கு சென்றுவிட்டது. இனி அதைப் பற்றி பேசி எந்தப் பிரயோஜனமும் இல்லை. காங்கிரஸிடம் இருக்கிற 10 தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதியை இளங்கோவனுக்கு தலைமை ஒதுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
தற்போதைய நிலையில், இளங்கோவனுக்கு சீட்டு ஒதுக்க காங்கிரஸ் மேலிடமும் முடிவு செய்திருப்பதாக  தகவல்கள் கசிகின்றன. கடைசிகட்ட தகவலின் அடிப்படையில் ஈரோடுக்கு அருகில் உள்ள கரூர் மற்றும் விருதுநகர் தொகுதிகள் இளங்கோவனுக்கு வழங்க ஆராயப்பட்டதாக காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

click me!