ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்காக களமிறங்கும் மோடி... தேனியில் பிரசாரம் மேற்கொள்ள திட்டம்!

By Asianet Tamil  |  First Published Mar 31, 2019, 9:05 AM IST

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தை ஆதரித்து பிரசாரம் செய்ய பிரதமர் மோடி தேனிக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தேனி மக்களவைத் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் அதிமுக சார்பில் களமிறங்கியுள்ளார். திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் களமிறங்கியுள்ளார். மும்முனை போட்டியால் தேனியில் அரசியல் களம் சூடாக உள்ளது. மேலும் தேனி தொகுதி ஸ்டார் அந்தஸ்து பெற்ற தொகுதியாகவும் மாறி உள்ளது.


இளங்கோவனை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு பிரசாரம் செய்த நிலையில், வைகோ, உதயநிதி, குஷ்பூ போன்றவர்களும் பிரச்சாரம் செய்ய உள்ளனர். ராகுலையோ அல்லது பிரியங்காவையோ தேனி தொகுதிக்கு அழைத்து வந்து பிரசாரம் செய்யும் முயற்சியிலும் இளங்கோவன் இறங்கியிருக்கிறார். இந்நிலையில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்துக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி தேனிக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Latest Videos

 
ஏப்ரல் 13-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி, தேனியில் பிரசாரம் செய்வார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கோவையில் மோடி பிரசாரம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேனியில் அவர் பிரசாரம் செய்வார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொள்வதைவிட,  ஓ.பன்னீர்செல்வம் மகன் தொகுதிக்கு மோடி முக்கியத்துவம் அளித்திருப்பது அக்கட்சியினரிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது. 
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மோடியுடன் நெருக்கமாக பன்னீர்செல்வம் இருந்துவருவதன் பயனாக அவர் தேனிக்கு வருவதாக அதிமுக தரப்பில் கூறப்படுகிறது. தேனியில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் என்ற தகவல் அதிமுக தரப்பில் மகிழ்ச்சியையும் பாஜக சார்பில் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

click me!