சரியும் எடப்பாடியாரின் செல்வாக்கு... மோடி ஆசியுடன் முதல்வராகிறார் ஓ.பி.எஸ்..?

By Thiraviaraj RMFirst Published May 25, 2019, 4:35 PM IST
Highlights

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கொங்கு மண்டலத்தை கோட்டையாக வைத்திருந்த அதிமுக குறிப்பாக தங்கமணி, வேலுமணி, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது சொந்த ஊர்களிலேயே படுதோல்வியை சந்தித்து இருப்பது இம்மூவருக்கும் இருக்கும் செல்வாக்கை அசைத்துப் பார்த்திருக்கிறது.

அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா மறைந்த பிறகு கொங்கு மண்டலம்தான் அதீத ஆதிக்கம் செலுத்தி வருகிறது என கழக நிர்வாகிகள் அதிருப்தியை வெளிப்படையாக பேசுவதற்கு முக்கிய காரணம் அதிமுகவில் உள்ள கொங்குமண்டல அமைச்சர்களான தங்கமணியும், வேலுமணியும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தான். மற்ற அமைச்சர்களை விட வேலுமணி, தங்கமணி இருவருக்கும் தான் ஆட்சி அதிகாரத்தில் கூடுதல் முக்கியத்துவம் உள்ளது. இருவரும் டெல்லி பாஜக தலைமையுடன் நேரடி தொடர்பில் இருப்பவர்கள். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பல்வேறு அரசியல் ரகசிய பணிகளை செய்து வருவதும் இந்த இருவரே. 

ஆனால், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கொங்கு மண்டலத்தை கோட்டையாக வைத்திருந்த அதிமுக குறிப்பாக தங்கமணி, வேலுமணி, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது சொந்த ஊர்களிலேயே படுதோல்வியை சந்தித்து இருப்பது இம்மூவருக்கும் இருக்கும் செல்வாக்கை அசைத்துப் பார்த்திருக்கிறது. 

இரண்டாண்டு காலமாக தனது பதவியை தக்கவைத்துள்ள  எடப்பாடி பழனிசாமி இடைத்தேர்தலில் அதிமுக பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளை பெறுவதில் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனாலும் அவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள மேற்கு மண்டலத்தில் மக்களவை தேர்தலில் அதிமுக மிகக் கடுமையான தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் தொகுதி உட்பட கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட தொகுதிகளை அதிமுக பறிகொடுத்துள்ளது.

 

எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் திமுக வேட்பாளர் பார்த்திபன் அதிக ஓட்டுக்களை பெற்றிருக்கிறார்.   சேலம் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளரான பார்த்திபன்  பெற்ற வாக்குகள் 6,06,302. அங்கு அதிமுக சரவணன் பெற்ற வாக்குகள் 4 லட்சத்து 59 ஆயிரத்து 376. அந்த வகையில் 1 லட்சத்து 46 ஆயிரத்து 926 வாக்கு வித்தியாசத்தில் முதல்வராக இருக்கும் எடப்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்று அவரது செல்வாக்கை சிதைத்துப்போட்டிருக்கிறார்.  

அமைச்சர் வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதி பொள்ளாச்சி மக்களவைக்குள் வருகிறது. பொள்ளாச்சியில் அதிமுக யாரை நிறுத்தினாலும் வெற்றி பெறக்கூடிய கோட்டையாக இருந்தது. ஆனால் செல்வாக்கு மிக்க அமைச்சராக இருக்கும் வேலுமணி தொகுதியான பொள்ளாச்சியை 39 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக ஒட்டை விட்டுள்ளது. அங்கு திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் 1 லட்சத்து 63 ஆயிரம் 359 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியிருக்கிறார். அதிமுக வேட்பாளர் மகேந்திரன் பெற்ற வாக்குகள் 5 லட்சத்து 905 வாக்குகள். 39 ஆண்டுகளுக்கு மின் முன், அதாவது 1980-ம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு சி.டி.தண்டபானி வெற்றி பெற்றிருந்தார். அத்தோடு திமுகவுக்கு அங்கு திருப்பம் கிடைக்கவே இல்லை. ஆனால் பொள்ளாச்சியை வேலுமணி கோட்டை விட்டுள்ளார். 

அமைச்சர் தங்கமணியின் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி ஈரோடு மக்களவை தொகுதியில் வருகிறது. இங்கு திமுக கூட்டணியில் போட்டியிட்ட ம.தி.மு.க கணேசமூர்த்தி சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் அதிமுகவை விட திமுக 20 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளது. ஆனால் சென்ற  சட்டமன்ற தேர்தலில் இந்த குமாரபாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் தங்கமணி திமுகவை விட சுமார் 44 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்று இருந்தார். ஆனால் இப்போதோ திமுகவுக்கு 20 ஆயிரம் வாக்குகள் கூடி அது அதிமுகவுக்கு குறைந்துள்ளது. குமாரபாளையம் தொகுதி எனது கோட்டை என மார்தட்டி வந்த அமைச்சர் தங்கமணி தனது சொந்த ஊரிலேயே கட்சிக்கான வாக்குகளை குறைத்துவிட்டார்.

அதேநேரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் போட்டியிட்ட தேனி தொகுதியில் அதிமுக தனது வெற்றியை உறுதிசெய்துள்ளது. எனவே சொந்த சமுதாயத்தினரிடமே எடப்பாடி பழனிசாமி தனது செல்வாக்கை இழந்துவிட்டார். அதிமுக வெற்றி பெற்ற 9 தொகுதிகளில் நிலக்கோட்டை, மானாமதுரை, பரமக்குடி, சாத்தூர், விளாத்திகுளம் என 5 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றதற்கு தனது தனிப்பட்ட செல்வாக்கே காரணம். 

தன்னுடைய பகுதியில் தனக்கான செல்வாக்கு வலுவாக இருக்கிறது. ஆனால், எடப்பாடி, அவருடன் இருக்கும் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சரிவை சந்தித்து வருகின்றனர். மக்கள் எடப்பாடி தலைமையைவிட எனது தலைமையையே விரும்புவதாகவும் சுட்டிக்காட்டி, பாஜக தலைவர்களுக்கு தூதுவிட்டிருக்கிறாராம் ஓபிஎஸ். அதோடு மட்டுமல்லாது ஜெயலலிதாவால் நான் முதல்வராக ஏற்றுக் கொள்ளப்பட்டவன். எடப்பாடி பழனிசாமி சசிகலாவால் திடீரென ஆட்சிக்கு வந்தவர். ஆகையால் எடப்பாடி பழனிசாமி தலைமையை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் எதிரொலியாகத்தான் பாஜக வெற்றி பெற சாதகமாக இருந்த கோவை, நாகர்கோயில் தொகுதிகளை கூட பாஜகவால் வெல்ல முடியவில்லை.  

தனக்கு முதல்வர் பதவி கொடுத்தால் மட்டுமே கட்சியையும், செல்வாக்கையும் உயர்த்த முடியும் எனக்கூறி பாஜக தலைவர்களை வலியுறுத்தி வருகிறாராம் ஓ.பி.எஸ். அநேகமாக மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு இந்த விவகாரம் பெரிதாக வெடிக்கலாம் என அதிமுகவுக்குள் பேசப்படுகிறது. 

பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், நிலக்கோட்டை, மானாமதுரை ஆகிய தொகுதிகளில் திமுக வேட்பாளர்களுக்கு நெருக்கடி கொடுத்து அதிமுக-வினர் வெற்றிபெற்றனர். இதேபோல, சோளிங்கர் பரமக்குடி, சாத்தூர், விளாத்திகுளம், சூலூர் ஆகிய தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது. இதை உணர்ந்தே அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ் செல்வன் பாஜக தயவால் ஓ.பன்னீசெல்வம் முதல்வராக முயற்சிப்பதாக கூறியிந்தார். 

click me!