கழுகுப் பார்வையில் ‘காவி’யாகி போன இந்தியா: மீண்டும் மோடியா?

First Published Mar 5, 2018, 12:17 PM IST
Highlights
Modi is back for indian PM


இந்திய வரைபடத்தை கழுகுப் பார்வையில் பார்த்தால் பெரும்பான்மை பகுதிகள் காவி நிறத்தில் இருக்கின்றன. இது, ‘அசைக்க முடியாத கட்சியாக பி.ஜே.பி. வலுப்பெற்று நிற்கிறது!’ என்பதை காட்டுகிறது. இதன் மூலம் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பி.ஜே.பி.யே மீண்டும் வெல்லுமோ! எனும் அதிர்ச்சியை பி.ஜே.பி.யின் எதிர்கட்சிகள் அத்தனை பேரிடமும் உருவாக்கியுள்ளது உண்மை. 

நேற்று வெளியான திரிபுரா, நாகலாந்து மாநிலங்களின் வெற்றியை தொடர்ந்து பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை இந்தியாவில் 20 ஆக உயர்ந்துள்ளது. சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து இந்தியாவில் கோலோச்சிய காங்கிரஸின் கையிலோ பஞ்சாப், கர்நாடகம், புதுச்சேரி மற்றும் மிசோரம் என நான்கு மாநிலங்கள்தான் உள்ளன. தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சியும், மேற்கு வங்காளத்தில் திரிணமுல் காங்கிரஸும், டில்லியில் ஆம் ஆத்மியும், ஒடிசாவில் பிஜூ ஜனதாதளமும் என ஐந்து மாநிலங்களில்தான் பி.ஜே.பி. அல்லாத கட்சிகளின் ஆட்சி வலுவாய் நடக்கிறது. 

இதில் ஆந்திராவிலும், சிக்கிமிலும் ஆட்சியில் கூட்டணி கட்சியாக பி.ஜே.பி. இருக்கிறது. தமிழகத்தில் என்னதான் அ.தி.மு.க. ஆட்சி நடக்கிறது என்றாலும் அதன்  லகான் பி.ஜே.பி.யின் கையில் இருப்பதோடு, மைனாரிட்டியான நிலையிலும் அது ஓடிக் கொண்டிருப்பது என்னவோ மோடியின் ஆசீர்வாதத்தினால்தான் என்பதால் தமிழகத்தை அ.தி.மு.க. தான் ஆளுகிறது என்று பெருமையாக சொல்ல எந்த வாய்ப்பும் இல்லை. 

ஆக முதலில் சொன்னது போல் கழுகுப் பார்வையில் பார்த்தோமேயானால் இந்தியாவை சுற்றிச் சுற்றி காவி நிறம்தான் ஆட்சி புரிகிறது. இதன் வெளிப்பாடு எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலின் மூலம் மீண்டும் பி.ஜே.பி.யே ஆட்சி அரியணையில் அமருமோ, மோடியே மீண்டும் பிரதமராவாரோ? என்றே எண்ணத்தை கிளப்பியிருக்கிறது. 

click me!