காதணி விழாவில் மோடி! வளைக்காப்பில் வரவேற்கும் ராகுல் : தரையிறங்கி விளையாடும் தேசிய அரசியல்

First Published May 26, 2017, 9:51 AM IST
Highlights
modi in mgr birthday rahul in karunanidhi birthday


தேனி மாவட்டம் அல்லி நகர வீதிகளில் ’எங்கள் அண்ண முத்துப்பாண்டி வீட்டு மழலைச்செல்வங்களின் காதணி விழாவுக்கு வருகை தரும் அய்யா நரேந்திர மோடியை இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.’ _ என்று பொளேர் பிங்க் நிறத்தில் கூடிய விரைவில் பிளக்ஸ் வைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்தளவுக்கு அ.தி.மு.க.வின் மைதானத்தினுள் இறங்கி ஆட ஆரம்பித்துவிட்டார் மோடி. ஆனால் எடப்பாடி _ பன்னீர் என்று இரண்டு சைடிலும் அவர் கோல் போட்டுக் கொள்வதும், எங்கு விழுந்தாலும் அவரது கோல் சேம் சைடாக இருப்பதும்தான் அரசியல் ஆச்சரியமாக இருக்கிறது. 

சற்றே தெளிவாக சொல்லப்போனால் தமிழ் மண்ணை ஆளும் தகுதி சுற்றில் செம்ஃபைனலை பா.ஜ.க. கடந்துவிட்டது என்றே சொல்லலாம். காரணம்? தனது அரசியல் எதிரியை மூக்கறுப்பதற்காக ’எதிரியின் எதிரி நண்பன்’ எனும் கான்செப்டை பொதுவாக திராவிட கட்சிகள்தான் தமிழகத்தில் ஃபாலோ செய்யும். வடக்கில் இந்த மாதிரியான அரசியலெல்லாம் கிடையாது. நாடாளுமன்ற கூட்ட மண்டபத்தினுள்தான் காங்கிரஸும் பா.ஜ.க.வும், மார்க்சிஸ்டும் சிவசேனாவும் எதிர்கட்சிகள்.

ஆனால் வராண்டாவுக்கு வந்துவிட்டாலே எல்லோரும் நண்பர்கள்தான். சுஷ்மாவின் கைகளை பிடித்தபடி சோனியா பேசுவதையும், யெச்சூரியின் முதுகில் செல்லமாக தட்டியபடி அத்வானி செல்வதையும் சாதாரணமாக பார்க்கலாம். இப்படியான தேசிய பாரம்பரியத்தில் வளர்ந்த பா.ஜ.க. தமிழகத்தில் இதுவரையில் ஹைலெவல் அரசியலைத்தான் பண்ணிக் கொண்டிருந்தது. 

ஆனால் தற்போது தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை பிடித்தே ஆகவேண்டும் என்கிற துடிப்பில் இருக்கிறது பி.ஜே.பி. ‘ஆமாம் நாங்கள் தமிழகத்தில் ஆட்சிக்கு வர முயல்கிறோம். இதில் எந்த முரண் கருத்துமில்லை.’ என்று ஹெச்.ராஜா வெளிப்படையாகவே போட்டு உடைத்திருக்கும் நிலை இதை உறுதிப்படுத்துகிறது. இந்நிலையில் தமிழக அளவில் பா.ஜ.க.வின் அரசியல் சித்தாந்தம் மளமளவென மாறி நிற்பது ஆச்சரியம் பிளஸ் அதிர்ச்சியை தருகிறது. 

வரும் ஜூன் 3_ம் தேதியன்று தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்தநாள் விழா மற்றும் அவரது சட்டசபை வைர விழா கொண்டாடப்படுகிறது. இதற்கு பல கட்சியின் முக்கிய தலைவர்களை அழைத்த ஸ்டாலின் பி.ஜே.பி.யை மட்டும் கண்டுகொள்ளவில்லை.

தமிழிசை இந்த விவகாரத்தை ஒரு பட்டிமன்றமாகவே மாற்றி சில நாட்கள் பரபரப்ப கிளப்பினார். கருணாநிதியின் விழாவில் பங்கேற்க பா.ஜ.க. விருப்பமாய் உள்ளது என்பதை நாசூக்காய் தெரிவித்தும் கூட ஸ்டாலின் மனமிறங்கி வரவில்லை. விவசாயிகள் பிரச்னை பற்றி பிரதமரிடம் பேச முயன்ற தனக்கு மோடி டைம் ஒதுக்காத கோபம் ஸ்டாலினுக்கு. ஆனால் இதை உணராமல் தி.மு.க.வை தூற்றி தள்ளியது தமிழக பா.ஜ.க. 

இந்நிலையில் தங்களை அப்செட் ஆக்கிய தி.மு.க.வுக்கு செம பதிலடி கொடுக்கும் முயற்சியில் தேசிய பா.ஜ.க. இறங்கியது. இந்நிலையில்தான் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா பெரும் நிகழ்வுக்கு மோடியை கலந்து கொள்ள வேண்டி பன்னீர் நேரில் அழைப்பு விடுத்தார்.

இதற்கு மோடியும் டைம் ஒதுக்கிவிட்டாரென்று பன்னீரே திருவாய் மலர்ந்திருக்கிறார். சிலரோ பன்னீரை இப்படி ஒரு விழாவை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்ய சொல்லி மோடியை அழைக்க வேண்டும் என்கிற அஸைன்மெண்டே பா.ஜ.க. போட்டதுதான் என்று சொல்பவர்களும் சிலர் இருக்கிறார்கள். 

மோடி இந்த விழாவில் கலந்து கொள்ளும் பட்சத்தில் அது தங்களை வைரவிழாவுக்கு அழைக்காத தி.மு.க.வை நேருக்கு நேராக பி.ஜே.பி. அவமதிக்கும் விஷயமாகவே பொதுவெளியில் பார்க்கப்படும் என்று இப்போதே கமெண்ட் செய்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 

இது தி.மு.க.வுக்கு ஒரு அப்செட் சூழலை தந்திருக்கிறதுதான். இது போதாதென்று கலைஞரின் வைர விழா நிகழ்வில் சோனியாவுக்கு பதிலாக ராகுல்தான் கலந்து கொள்கிறார். தி.மு.க.வுடனன கூட்டணியை விருந்தில் வைக்கப்பட்ட பாகற்காய் பொரியலாகதான் ராகுல் எப்போதும் பார்க்கிறார்.

இந்திரா மற்றும் சோனியாவுடன் கருணாநிதிக்கு இருந்தது போல் அரசியல் புரிந்துணர்வானது ஸ்டாலினுக்கும் ராகுலுக்கும் இடையில் என்றுமே இருந்ததில்லை. எனவே ராகுலின் வருகை வெறும் சம்பிரதாய அளவில்தான் இருக்குமே தவிர, அதில் உணர்வுப்பூர்வமான தருணங்கள் ஏதும் இருக்காது என்பதையும் விமர்சகர்கள் கோடிட்டு காட்டுகின்றனர். 

ராகுல் இந்த விழாவில் கலந்து கொள்வதும் தமிழகத்தில் அரசியல் சூழ்நிலையை மையமாக வைத்துதான் என்பதும் நிதர்சனம். சொல்லப்போனால் பா.ஜ.க.வின் தலைமை முகங்கள் தமிழகத்தில் தொடர்ந்து வலம் வரும் பட்சத்தில், தேர்தல் அரசியலுக்காக ராகுலும் தமிழகத்தில் தொடர்ந்து முகாமிடலாம்.

தன் கட்சி நிர்வாகி வீட்டு வளைகாப்பு வைபவங்களில் கூட அவர் கலந்து கொண்டு விருந்தினர்களை வரவேற்கும் காட்சிகள் கூட ஈடேறலாம். ‘தங்கச்சி கூடிய சீக்கிரம் ஒரு மருமகனை பெத்து இந்த தாய்மாமன் கையில கொடு”என்று டயலாக் பேசியபடி சந்தனம் பூசுவதெல்லாம் சகஜமாகும். இப்படியான சென்டிமெண்ட் சீனெல்லாம் ராகுலுக்கு ரொம்பவே பிடிக்கும். 

ஆக அரசியல் பொதுக்கூட்டங்கள் நடக்கும் தமிழக வீதிகளும், மைதானங்களும் மோடி, ராகுல் எனும் தேசிய தலைவர்கள் சர்வசாதாரணமாக கலந்து கொள்ளுமளவுக்கு எளிமையாக மாறிப்போனதை நினைத்து பெருமை கொள்வதா அல்லது பெருந்தன்மையான வட இந்திய அரசியலின் மென் முகம் இப்படி மாறிப்போனதை நினைத்து வருந்துவதா என புரியவில்லை. 

click me!