
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நாடாளுமன்ற எம்.பி.க்கள் மக்களின் பிரதிநிதிகள். எம்.பி.க்கள் மக்களின் கருத்துக்களைத்தான் நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்கிறார்கள். ஆனால், மோடி அரசின் மடியில் கணம் இருப்பதால் வழியில் பயந்துகொண்டிருக்கிறது. இந்த மத்திய அரசு மக்களின் நம்பிக்கைக்கு விரோதமாக நடப்பதால், ஒரு நிமிடம் கூட நீடிக்கக் கூடாது. உடனே இந்த அரசு ராஜினாமா செய்துவிட்டு தேர்தலைச் சந்திக்க வேண்டும். நாடாளுமன்றத்தை முடக்கிய முதல் குற்றவாளியே மோடிதான்.
தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம் வரவேற்கத்தக்கது. இந்தத் திட்டத்தில் பயன்படுத்தும் பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு ரூ. 15 ஆயிரம் ஊதியமாக வழங்க வேண்டும். முறைகேடுகளை செய்யவே பல திட்டங்களை அதிமுக அரசு தீட்டியது. ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் கட்டப்பட்டு வரும் தடுப்பணைகளை தமிழக அரசு நிறுத்தி விரிவாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என்று கே.சுப்பராயன் தெரிவித்தார்.