மக்களின் வயிற்றில் அடித்துவிட்டு.. ரத்தம் குடிக்க பார்க்கிறது மோடி அரசு.. பாஜகவை டார் டாராக கிழித்த சீமான்.

By Ezhilarasan BabuFirst Published Aug 23, 2021, 12:31 PM IST
Highlights

விலைவாசி உயர்வு விண்ணைமுட்டுமளவுக்கு உயர்ந்துசெல்கையில் அதனைக் குறைக்கவோ, மட்டுப்படுத்தவோ எதுவொன்றையும் செய்யாத பாஜக அரசு, நெருடலோ, தயக்கமோ, குற்றஉணர்ச்சியோ ஏதுமின்றி சுங்கக்கட்டணத்தை உயர்த்த முனைவது உழைக்கும் மக்கள் மீது தொடுக்கப்படும் பொருளியல் போராகும்.

எரிபொருள், எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தி, ஏழைகளின் வயிற்றலடித்துவிட்டு, சுங்கக்கட்டணத்தின் விலையையும் உயர்த்த எண்ணுவது மக்களின் இரத்தத்தைக் குடிக்கும் கொடுஞ்செயல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு:-  

தமிழ்நாட்டிலுள்ள 14  சுங்கச்சாவடிகளிலும் 8 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்துவதற்கு தேசிய  நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்திருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. எரிபொருட்களின் விலையை பன்மடங்காக உயர்த்தி, அத்தியாவசியப்பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுத்துவிட்டு, எரிகாற்று உருளையின் விலையையும் அதிகரிக்கச்செய்துவிட்டு, இப்போது சுங்கச்சாவடிக்கட்டணத்தையும் உயர்த்த எண்ணும் பாஜக அரசின் வன்செயல் கடும் எதிர்ப்பை மக்கள் மனங்களில் ஏற்படுத்தியிருக்கிறது. தவறானப் பொருளாதாரக்கொள்கைகளினாலும், மிகமோசமான ஆட்சிமுறையினாலும், கூட்டிணைவு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வரிச்சலுகைகளினாலும் நாட்டின் பொருளாதாரத்தை சூறையாடிவிட்டு, அதனை ஈடுசெய்ய நாட்டு மக்கள் மீது சுமையேற்றும் பாஜக அரசின் செயல்பாடுகள் யாவும் கடும் கண்டனத்திற்குரியது. 

எரிபொருள், எரிகாற்று உருளையின் விலையேற்றம், அதன்மூலம் எதிரொலித்த இன்றியமையாதப் பொருட்களின் விலையுயர்வு போன்றவற்றினால் நாற்புறமும் சுழன்றடிக்கும் பெருஞ்சிக்கலில் சிக்குண்டு, மீள முடியாது மக்கள் தவித்துக்கொண்டிருக்கையில் தமிழகத்திலுள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை உயர்த்துவது வெந்தப் புண்ணில் வேலைப்பாய்ச்சும் கொடுங்கோன்மையாகும்;  எரிபொருள்கள் மற்றும் எரிகாற்று உருளையின் விலையேற்றத்திற்கு எதிராக ஒட்டுமொத்தச்சமூகமே போராடி, அவற்றின் விலையைக் குறைக்க குரல்கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் சுங்கக்கட்டணத்தை உயர்த்தத் திட்டமிடுவது மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் கொடுஞ்செயலாகும். எரிபொருள் மற்றும் எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தி, ஏழைகளின் வயிற்றலடித்துவிட்டு இப்போது சுங்கக்கட்டணத்தின் விலையையும் உயர்த்துவது துளியும் உளச்சான்றில்லாத கொடுங்கோல் ஆட்சியின் வெளிப்பாடேயாகும். 

விலைவாசி உயர்வு விண்ணைமுட்டுமளவுக்கு உயர்ந்துசெல்கையில் அதனைக் குறைக்கவோ, மட்டுப்படுத்தவோ எதுவொன்றையும் செய்யாத பாஜக அரசு, நெருடலோ, தயக்கமோ, குற்றஉணர்ச்சியோ ஏதுமின்றி சுங்கக்கட்டணத்தை உயர்த்த முனைவது உழைக்கும் மக்கள் மீது தொடுக்கப்படும் பொருளியல் போராகும். ஆகவே, மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, தமிழகத்திலுள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை உயர்த்தும் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் முடிவை உடனடியாகக் கைவிடச் செய்ய வேண்டுமென ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசை வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், தமிழகத்திலுள்ள சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு மிகப்பெரும் மக்கள்திரள் போராட்டத்தை முன்னெடுப்போமென எச்சரிக்கிறேன்.
 
 

click me!