
சட்டப்பேரவையில் 50 ஆண்டு காலம் செயலாற்றி பொன் விழா காணும் துரைமுருகனை முதல்வர் மு.க.ஸ்டாலின் வானளாவ புகழ்ந்து பேசினார். இதனைக் கண்டு தான் கிறுகிறுத்துப்போனதாக துரைமுருகன் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பொன்விழா காணும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை பாராட்டி இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார். தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கட்சிக்கும் ஆட்சிக்கும் துரைமுருகன் உறுதுணையாக இருக்கிறார். 100 ஆண்டுகால வரலாற்றில் 50 ஆண்டுகாலம் சட்டப்பேரவையை அலங்கரித்துகொண்டுள்ளார் துரைமுருகன். அவை முன்னவராக இருந்து வழிகாட்டி வருகிறார்.
கருணாநிதி மறைவுக்கு பிறகு எனக்கு வழிகாட்டியாக இருக்கிறார். கருணாநிதி மற்றும் க.அன்பழகன் இடத்தில் இப்போது துரைமுருகனை பார்க்கிறேன் என்று கூறிய போது துரைமுருகனின் கண்கள் கலங்கின. சட்டப்பேரவையே நெகிழ்ந்து போனது. முதல்வரைத் தொடர்ந்து எதிர்க்கட்சி துணை தலைவர் ஓபிஎஸ், பாமக தலைவர் ஜிகே மணி, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை என அனைத்துக் கட்சியினரும் துரைமுருகனை பாராட்டினர்.
அனைவரின் பேச்சையும் கேட்டு உள்ளம் பூரித்த துரைமுருகன் கண் கலங்கியபடி அவையில் பேசினார். ’’முதல்வர் மு.க.ஸ்டாலின் என் மீது இவ்வளவு பற்றும் பாசமும் வைத்திருப்பார் என்று நினைக்கவில்லை. என் வாழ்நாள் முழுவதும் அவருக்கு நன்றிக்கடனுடன் இருப்பேன். மு.க.ஸ்டாலின் கொஞ்சம் அழுத்தமானவர் என கலைஞ்சர் கூறுவார். ஆனால் முதலமைச்சரின் அன்பு வார்த்தைகளை பார்த்து கிறுகிறுத்துப்போகிறேன். தந்தையில் பாசத்தை மிஞ்சும் வகையில் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்’ என பேசமுடியாமல் துரைமுருகன் கண்ணீர் மல்க கைகூப்பி அமர்ந்தார்.