மக்கள் மருந்தக திட்ட பயனாளிகளிடம் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் தமிழக மக்களிடம் பிரதமர் மோடி பேசாமல் நிகழ்ச்சி முடிவடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தை பிரதமர் மோடி கண்டுகொள்ளவில்லை புறக்கணிக்கப்படுவதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன. தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது மத்திய அரசு கண்டுகொள்ளவில்லையென்றும் பிரதமர் நேரடியாக வந்து பார்வையிடவில்லையென்று கூறப்பட்டது. மேலும் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை புனரமைக்க வெள்ள நிவாரணம் 6 ஆயித்து 230 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பாக கேட்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு குறைவான தொகையையே வழங்கியது. இது திமுக உள்ளிட்ட கட்சிகளை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. இது போன்ற பல்வேறு திட்டங்களில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக கூறப்பட்டு வருகிறது.
undefined
இந்தநிலையில் மக்கள் மருந்தக பயனாளிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக உரையாடிய நிகழ்ச்சியானது நேற்று நடைபெற்றது. ஆண்டுதோறும் மார்ச் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை மக்கள் மருந்தகம் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. பிரதம மந்திரியின் மலிவு விலை மருந்துகள், மக்கள் மருந்தகம் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது இதன்மூலம் 50% முதல் 90% வரை மருந்துகள் சலுகை விலையில் விற்கப்படுகிறது. மருந்துகள் ஏழை குடும்பங்களுக்கும் நடுத்தர குடும்பங்களுக்கும் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசின் சார்பில் மக்கள் மருந்தகம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் மருந்தகம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த மக்கள் மருந்தகம் பயனாளிகளிடம் கலந்துரையாடல் செய்வதற்கான நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது இதில் பீகார்,ஒடிசா,கர்நாடகா, குஜராத், சத்தீஸ்கர்,தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மருந்தக பயனாளிகளிடம் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழகத்திலிருந்தும் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் எல்.இ.டி திரைகள் அமைத்து காணொலி காட்சி வாயிலாக பேசுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பிரதமர் மோடி பீகார்,ஒடிசா,கர்நாடகா, குஜராத், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை சேர்ந்த மக்கள் மருந்தகத்தில் ஏற்படும் பயன்கள் குறித்து பயனாளிகளிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். குஜராத் மாநிலத்தில் இருந்து பேசிய நபருக்கு அதிக நேரம் ஒதுக்கப்பட்டது, இதனையடுத்து தமிழக மக்களிடம் பிரதமர் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தும் பிரதமர் மோடி தமிழக மக்களிடம் பேசாமல் நிகழ்ச்சி முடிவடைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜக மாநில தலைவர் அண்ணணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பத்திரிக்கையாளர்களை சந்திக்க மறுத்துவிட்டு சென்றனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பிரதமரிடம் பேசுவதற்கு ஆவலாக இருந்த மக்களும் ஏமாற்றத்தோடு வீடு திரும்பினர்.