முதல் ராகுல்... அடுத்த நாள் மோடி... தேனியில் தேசிய தலைவர்கள் போட்டாபோட்டி!

By Asianet Tamil  |  First Published Apr 7, 2019, 12:32 PM IST

தேனியில் அடுத்தடுத்த நாட்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பிரதமர் நரேந்திர மோடியும் தேர்தல் பிரசாரம் செய்ய இருப்பதால், தேனி தொகுதி அகில இந்திய அளவில் நட்சத்திர தொகுதியாக மாறிவிட்டது.


தேனி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிடுகிறார். திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் தங்கதமிழ்செல்வன் களமிறங்கியுள்ளார். மூன்று முக்கியமான வேட்பாளர்கள் மோதுவதால், தேனி  தொகுதியில் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது. தொகுதியை யார் கைப்பற்றுவார் என்று எதிர்பார்ப்பும் தேனி தொகுதி மீது ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பிரசாரத்துக்காக தமிழகத்துக்கு வர உள்ளனர். இருவருடைய பிரசாரத்திலும் தேனி தொகுதி இடம் பெற்றுள்ளது. தற்போதைய தகவல்படி மோடி 2 முறையும் ராகுல் ஒரு முறையும் தமிழகத்துக்கு வர உள்ளனர். பிரதமர் மோடி 9-ம் தேதி கோவையிலும் 13-ம் தேதி தேனியிலும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்.
தேனியில் மோடி பிரசாரம் செய்யும் முதல் நாளே, அதாவது 12-ம் தேதி ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரும், அகில இந்திய காங்கிரஸ் தலைவரும் தேனி தொகுதியைக் குறிவைத்து பிரசாரம் செய்ய இருப்பதால் தமிழகத் தேர்தல் களத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தி தேனி நகரில் பைபாஸ் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் பொதுக்கூட்டத்தில் பிரசாரம் மேற்கொள்ள இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

 
பிரதமர் மோடி 13-ம் தேதி ஆண்டிப்பட்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்கிறார்.  தேனி மாவட்டத்தில் பிரதமர் மோடியும் ராகுல் காந்தியும் அடுத்தடுத்த நாட்களில் பிரசாரம் செய்ய உள்ளதால் தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக தேனி தொகுதி அகில இந்திய அளவில் நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது.  தேசிய கட்சிகளின் தலைவர்கள் தேனியில் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதால், இரு கட்சிகளின் தொண்டர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

click me!