
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஜனநாயக படுகொலை என்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என தெளிவாக தெரிகிறது என்றும் எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
18 எம்.எல்.ஏ.க்களும் வேறு கட்சிகளுக்கு செல்லாத நிலையில் தகுதி நீக்கம் செய்தது கண்டனத்துக்குரியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டப்பேரவை செயலாளர் க.பூபதி, இன்று வெளியிட்ட அறிவிப்பின் மூலம், முதலமைச்சரின் மீது புகார் அளித்ததற்காக தேர்தலில் போட்டியிட்டு மக்களின் அதிக வாக்கைப் பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிடிவி ஆதரவு 18 எம்எல்ஏக்கள், தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆளுநரிடம், முதலமைச்சர் எடப்பாடி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று மனு அளித்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், நீதிமன்றத்தில் முறையீட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு விசாரணை வரும் 20 ஆம் தேதி நீதிமன்றத்துக்கு வர உள்ளது.
மேலும், இன்று மாலைக்குள் அரசிதழில் வெளியிடப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், தமீம் அன்சாரி, தனியரசு ஆகியோருக்கு, சபாநாயகர் தனபால் மூன்று நாள் கெடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஜனநாயக படுகொலை என்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என தெளிவாக தெரிகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும் 18 எம்.எல்.ஏ.க்களும் வேறு கட்சிகளுக்கு செல்லாத நிலையில் தகுதி நீக்கம் செய்தது கண்டனத்துக்குரியது என்று குறிப்பிட்டார்.