
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சிக்கு துரோகம் செய்து விட்டார் என்றும், தற்போது துரோகமும் துரோகமும் தமிழகத்தை ஆட்சி செய்து வருவதாகவும் அதிமுக அம்மா அணி பொது செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டுள்ள ஆதரவு எம்.எல்.ஏ.க்களை, டிடிவி தினகரன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர், டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் பேசியதாவது:
புதுச்சேரியில் 15 நாட்களாக தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்களை சந்திக்க வந்துள்ளேன். தனது ஆதரவு எம்எல்ஏக்கள் யாரும் அடைத்து வைக்கப்படவில்லை. அவர்கள் சுதந்திரமாகத்தான் தங்கியுள்ளனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்றவே எம்.எல்.ஏ.க்கள் ஒன்றாக உள்ளனர். அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனைக்காகவே புதுச்சேரி வந்துள்ளேன். தன்னை முதலமைச்சராக்கிய கட்சிக்கே துரோகம் செய்தவர்கள் எப்படி மக்கள் நலம் காப்பார்கள்.
தற்போது, துரோகமும் துரோகமும் தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறது. ஆளுநர் காலதாமதம் செய்வதற்கான காரணம், பிரச்சனையை நீர்த்துப்போக செய்வதற்காகத்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.