
கூவத்தூர் சொகுசு விடுதியில் கூவத்தூரில் எனக்கு பணம் தருவதாக யாரும் சொல்லவில்லை. நானும் யாரிடமும் பணம் வாங்கவில்லை. தன்னுடைய குரலை போல யாரோ மிமிக்கிரி செய்து செய்து வெளியிட்டுள்ளனர் என்று மாறுவேடத்தில் தப்பிவந்த பன்னீர் அணி சரவணன் கூறியுள்ளார்.
டைம்ஸ் நவ் - மூன் டிவி இணைந்து நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூவத்தூர் சொகுசு விடுதியில் சசிகலா எம்.எல்.ஏக்களுக்கு பணமும், தங்க கட்டிகள் கொடுக்கப்பட்டதாக வெளியான வீடியோ ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கியது. இதில் பதிவான சரவணன் பேசிய காட்சி நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியநிலையில் தான் அப்படியெல்லாம் பேசவில்லை. யாரோ டப்பிங் கொடுத்து விட்டனர் கூறியுள்ளார் சரவணன்.
இதுதொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;
கூவத்தூர் சொகுசு விடுதிக்கு எந்த காரணத்தையும் சொல்லாமல் எம்.எல்.ஏ.க்களை சசிகலா கோஷ்டியினர் அழைத்துச் சென்றார்கள் . அங்கு சென்றபின் வெளியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் திணறிப்போனேன் பிறகு அங்கு என்ன நடக்கிறது என அறிந்தேன். இதனையடுத்து எனது தொகுதி மக்கள் என்னை தொடர்பு கொண்டு, நீங்கள் பன்னீர் அணிக்கு செல்ல வேண்டும் என்று கூறினர். அந்த அடிப்படையில் பன்னீர் அணியில் சேர்ந்து தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறேன்.
இந்நிலையில் 3 மாதத்திற்கு முன்பு, எடுக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு வீடியோ பதிவை அப்போதே வெளியிடாமல் தற்போது வெளியிடுவது ஏன்? அதில் கூறப்பட்டுள்ள எந்த கருத்தையும் கூறவில்லை. எனது குரலைப்போல் மிமிக்ரி செய்து வெளியிட்டுள்ளனர். கூவத்தூரில் எனக்கு பணம் தருவதாக யாரும் சொல்லவில்லை. நானும் யாரிடமும் பணம் வாங்கவில்லை. இதுமட்டுமல்ல நான், பன்னீர் அணியிலிருந்து விலகி விட்டதாக சமூகவலைதளங்களில் வதந்திகள் பரவியது.
இது போன்ற பொய்யான தகவலை ஏன் பரப்புகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. கடந்த 5 தினங்களுக்கு முன்பு கூட பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசிய கூட்டத்தில் நானும் கலந்துகொண்டேன். நான் தொடர்ந்து பன்னீர்செல்வத்துடன் இருப்பேன். இல்லாவிட்டால் எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன். எனக்கு பணம் கொடுப்பதாக யாரும் சொல்லவில்லை. நானும் அப்படிப்பட்ட ஆளில்லை இது தான் உண்மை என்று கூறியுள்ளார் சரவணன்.