திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை கோர்ட்டுக்கு இழுத்த கு.க. செல்வம்... கட்சியிலிருந்து நீக்கியதை எதிர்த்து வழக்கு..!

By Asianet TamilFirst Published Sep 10, 2020, 9:31 PM IST
Highlights

திமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து சென்னை நீதிமன்றத்தில் ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ. கு.க. செல்வம் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

திமுகவில் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் பதவியை எதிர்பார்த்து ஏமாந்துபோன ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. கு.க. செல்வம் கடந்த மாதம் 4ம் தேதி டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்தார். இதனையடுத்து அவரை திமுக மேலிடம் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்தது. அன்றைய தினமே சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் சென்று ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் கு.க. செல்வம் பங்கேற்றார். பாஜக தலைவர்களையும் பாஜக அலுவலகத்துக்கும் சென்றாலும் பாஜகவில் இணையவில்லை என்று கு.க. செல்வம் மறுத்து வந்தார்.


இந்நிலையில் கட்சியிலிருந்து கு.க. செல்வத்தை நிரந்தரமாக நீக்கி திமுக தலைமை உத்தரவுப் பிறப்பித்தது. இதற்கிடையே திமுகவில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து கு.க.செல்வம் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். அந்த மனுவில், “கட்சி விதிப்படி உறுப்பினரை நீக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு மட்டுமே உண்டு. திமுக தலைவருக்கு அந்த அதிகாரம் இல்லை. மேலும் என்னிடம் எந்த விசாரணையும் செய்யாமல் கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர்.” என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் பதில் அளிக்கும்படி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

click me!