
செல்பியால் வெடித்த சர்ச்சை தற்போது சட்டமன்றம் வரை கருணாஸை கதறக் கதற துரத்திக் கொண்டிருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தொகுதியில் வெற்றி பெற்றதும் முதல் முறையாக சட்டமன்றத்தில் காலடி எடுத்து வைத்த நடிகர் கருணாஸ், “நீங்க நல்லா இருக்கனும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற” என உச்சசாயலில் உரக்கப் பாடி ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம்பிடித்தவர்.
அதிமுக உறுப்பினர்களையே தூக்கி அடிக்கும் விதமாக கருணாஸ் வெளிப்படுத்திய விசுவாசம் என்ற அந்த பிம்பம், ஜெயலலிதாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த போது ஒரு செல்பியால், ரசம் போன கண்ணாடியைப் போல உண்மையை வெளிக்காட்டியது.
துயரத்திலும் செல்பியை எடுத்து மரணத்தைக் கொண்டாடுகிறார் என்று கர்ணாஸை ஊடகங்கள் வறுத்தெடுக்க, மனுஷன் அன்றிலிருந்து நாட் ரீச்சபிள் மோடுக்கு தன்னை மாற்றிக் கொண்டார். செல்பி சர்ச்சை தந்த இம்சையில் இருந்து கருணாஸ் மீண்ட நிலையில், மீள முடியாத ஒரு வலையில் அவரை சிக்க வைத்திருக்கிறார் கூவத்தூர் புகழும் மதுரை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ.மான சரவணன்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் சசிகலா ஆதரவு எடப்பாடி அரசுக்கு வாக்களிக்க, இன்னாருக்கு எல்லாம் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுக்கப்பட்டது என்று சரவணன் பேசியதாகக் கூறப்படும் வீடியோ தமிழகத்தின் இன்று ஹாட் டாபிக்
சரவணன் அளித்த அந்த காஸ்ட்லி லிஸ்ட்டில் முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸூம் ஒருவர்.
“MLA FOR SALE” Joint Sting Operation என்ற பெயரில் பண பேர விவகாரத்தை தண்டோரா போட்டு தண்டவாளம் ஏற்றிக் கொண்டிருக்கிறது ஊடகங்கள். இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் இன்று சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது. கேள்வி நேரம் முடிவடைந்ததும், ஜி.எஸ்.டி. மசோதாவை தாக்கல் செய்ய பேரவைத் தலைவர் ஆயுத்தமாகிக் கொண்டிருந்த நிலையில், இருக்கையில் இருந்து எழுந்தார் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் அளிக்கப்பட்டது குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இது குறித்து விவாதம் நடத்த முடியாது என்று சபாநாயகர் மறுக்க வெடித்தது அமளி. திமுக உறுப்பினர்கள் வெளியேற்றம், சாலை மறியல், கைது, என ஒட்டுமொத்த சட்டமன்ற வளாகமே போர்க்களமானது.
ஒருபுறம் மு.க.ஸ்டாலினின் அப்டேட்டுகளை தொலைக்காட்சி செய்தியாளர்கள் லைவாக கவரேஜ் செய்ய மறுபுறம், கருணாஸை பேட்டி எடுக்கவும் மீடியாக்கள் தவறவில்லை…
ஆனால் மனுஷன் காற்றோடு காற்றாக கரைந்து விட்டார். சட்டப்பேரவைக் கூட்டத் தொடருக்கு கருணாஸ் வந்தாரா என்பதை அறிய ஒரு செய்தியாளர்கள் குழு, சட்டமன்ற வருகைப் பதிவேட்டையும் பரிசோதித்துக் கொண்டிருந்தது.
கருணாஸோடு எஸ்கேப் ஆனவர்களின் பட்டியலில் பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் தனியரசும் ஒருவர். சசிகலாக்கு ஆதரவாக வாக்களிக்க தனியரசுக்கு 10 கோடி அளிக்கப்பட்டது என சரவணன் தெரிவித்ததால், யாருடனும் வராமல் தனியாக வந்து தனியாக பறந்துவிட்டார் தனியரசு…..