அதிர்ஷ்டமில்லாத கனிமொழி... உள்ளுக்குள் புழுங்கித் தவிக்கும் மு.க.ஸ்டாலின்..!

By Thiraviaraj RMFirst Published May 23, 2019, 3:57 PM IST
Highlights

இத்தனை சீட்டுகள் வெற்றி பெற்றும் மத்திய அமைச்சரவையில் இடம்பெற முடியவில்லையே என மகிழ்ச்சியை முழுமையாய் கொண்டாட முடியாமல் தவிக்கிறார் மு.க.ஸ்டாலின். 

2004- 2009 ஆகிய மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட்டணியுடன் கரம் கோர்த்த திமுக மத்திய அமைச்சரவையிலும் இடம்பெற்றது. 

2004ம் ஆண்டில் தமிழகத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணி  39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதிமுக ஒரு இடம் கூட பிடிக்கவில்லை. திமுக மட்டும் 16 இடங்களில் வென்றது. அப்போது, தனக்குள்ள செல்வாக்கை வைத்து கருணாநிதி சோனியாவிடம் சென்று, தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, அ.ராஜா, சுப்புலட்சுமி ஜெகதீசன், பழனிமாணிக்கம், எஸ்.ரகுபதி, வேங்கடபதி என ஏழு பேருக்கு மத்திய அமைச்சர் பதவியை வாங்கிக் கொடுத்தார். 

மீண்டும் அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து மத்தியில் காங்கிரஸ் கூட்டணியே ஆட்சி அமைத்தது. அப்போதும் இந்தக் கூட்டணியில் தமிழகத்தில் திமுக இடம்பெற்றது. அதில் திமுக கூட்டணி 27 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக மட்டும் 18 தொகுதிகளில் வென்றது. 

அப்போதும் மகன் மு.க.அழகிரிக்கு ரசாயாணம் மற்றும் உரத்துறை, தயாநிதி மாறனுக்கு ஜவுளித்துறை. எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கு நிதித்துறை இணை அமைச்சர். நெப்போலியனுக்கு சமூகநீதித்துறை இணை அமைச்சர். எஸ்.ஜெகத்ரட்சகனுக்கு தகவல், ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர். காந்தி செல்வனுக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் என தனது செல்வாக்கால் பெற்றுத் தந்தார் கருணாநிதி. அடுத்து அ.ராசாவையும் அமைச்சராக்கினார் கருணாநிதி. 

ஆனால் அடுத்து வந்த 2014 மக்களவை தேர்தலில் திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை. அதிமுக தனித்து நின்று 37 தொகுதிகளில் வென்றது. ஆனாலும் பாஜகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தது அதிமுக. இதனால் பாஜக அமைச்சரவையில் அதிமுக இடம்பெறவில்லை. பாஜக சார்பில் கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று மத்திய அமைச்சரானார்.  


இந்நிலையில் 2019 தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தும், மத்திய அமைச்சரவையில் இடம்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. பெரும்பான்மை பலம் பாஜகவிடம் உள்ளதால் திமுக உறுப்பினர்கள் யாரும் மத்திய அமைச்சரவையில் இடம்பிடிக்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது.

 

அப்படிப் பார்த்தால் கடந்த ஐந்தாண்டு காலமும், இனி வரும் 5 ஆண்டு காலத்திற்கும் ஆக மொத்தம் 10 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் இடம்பிடிக்கவில்லை. ஒருவேளை பாஜகவுடன் மு.க.ஸ்டாலின் கூட்டணி அமைத்திருந்தால் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்று இருக்கலாம். இதனால் மத்திய அமைச்சர் கனவில் இருந்த கனிமொழி, தயாநிதிமாறன், அ.ராசா, பழனிமாணிக்கம், டி.ஆர்.பாலு உள்ளிட்ட சிலரது மத்திய அமைச்சர் கனவு களைந்து போய் விட்டது. இத்தனை சீட்டுகள் வெற்றி பெற்றும் மத்திய அமைச்சரவையில் இடம்பெற முடியவில்லையே என மகிழ்ச்சியை முழுமையாய் கொண்டாட முடியாமல் தவிக்கிறார் மு.க.ஸ்டாலின். இந்த முறை கனிமொழியை மத்திய அமைச்சராக்கி விடலாம் என கருணாநிதி  குடும்பம் போட்டு வைத்திருந்த திட்டம் பணாலாகி விட்டதால் ஏமாற்றத்தில் இருக்கிறது. 

click me!