எம்.பி., தேர்தலில் சீட் இல்லை! தயாநிதிக்கு ஷாக் கொடுத்த ஸ்டாலின்!

First Published Jul 1, 2018, 12:27 PM IST
Highlights
M.K.Stalin who gave shock to Dayanidhi Maran


அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க சார்பில் தயாநிதிமாறன் போட்டியிட வாய்ப்பு இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வென்றவர் தயாநிதிமாறன். இரண்டு முறையுமே அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மத்திய சென்னையில் தயாநிதிமாறனால் வெற்றி பெற முடியவில்லை. இதன் பிறகு தி.மு.க. சார்பிலான போராட்டங்கள், பொதுக்கூட்டங்களில் தயாநிதிமாறன் அதிகம் கலந்து கொள்வதில்லை.

தனது சொந்த அலுவல் காரணமாக தயாநிதி மாறன் பிசியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வை தி.மு.க. விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனை முன்னிட்டு மத்திய சென்னை தொகுதியில் தனக்குத்தான் மீண்டும் சீட் என்பதை உறுதிப்படுத்த தயாநிதிமாறன் ஸ்டாலினை சந்திக்க முடிவு செய்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த முறை தயாநிதிமாறனுக்கு தி.மு.க. சார்பில் சீட் இல்லை என்று ஒரு முடிவு எடுக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு கட்சிப்பணிகளில் அதிகம் ஈடுபடவில்லை என்கிற காரணத்தை கூறி அவருக்கு சீட் மறுக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையான காரணம் என்னவென்றால், தற்போது அனைத்து செய்தி தொலைக்காட்சி உரிமையாளர்களுடனும் ஸ்டாலின் மருமகன் சபரீசன் மிக நெருக்கம் காட்டி வருகிறார்.

இதனைத் தொடர்ந்து அனைத்து தொலைக்காட்சிகளும், மு.க.ஸ்டாலின் செய்திகளுக்கு அவ்வப்போது முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அதேபோல் ஸ்டாலின் இமேஜை டேமேஜ் செய்யும் வகையிலான செய்திகள் தவிர்க்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலை தொடர வேண்டும் என்றால் தயாநிதி மாறன் மீண்டும் தி.மு.க.-வில் தலையெடுக்க கூடாது என்கிற ஒரு நிபந்தனையை அனைத்து தொலைக்காட்சி உரிமையாளர்களும் ஒரே குரலில் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

திமுக தலைமையும், சன் தொலைக்காட்சியை விட நடுநிலை ஊடகங்கள் தி.மு.கவிற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று கணக்கு போடுகிறது.

எனவே, தேர்தல் சமயத்தில் தொலைக்காட்சி நிறுவனங்களைப் பகைத்து கொள்வதை தடுக்க வேண்டும் என்றால், தயாநிதிமாறனை ஒதுக்கி வைப்பதை தவிர வேறு வழியில்லை என்று ஸ்டாலினிடம் முக்கிய நிர்வாகிகள்  அவ்வப்போது கூறிக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், ரஜினியை வைத்து சன் பிக்சர்ஸ் திரைப்படம் எடுப்பதும், ரஜினிக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து சன் நியுசில் செய்திகள் ஒளிபரப்புவதும் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே மத்திய சென்னைக்கு தி.மு.க சார்பில் போட்டியிட வேறு ஒரு வேட்பாளரை அடையாளம் காணுமாறு ஸ்டாலின் கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் அறிந்து ஸ்டாலினை சந்திக்க தயாநிதிமாறன் முயற்சித்ததாகவும் ஆனால் ஸ்டாலின் சந்திக்க மறுத்துவிட்டதாகவும் தி.மு.க வட்டாரங்களில் இருந்து தகவல்கள் றெக்கை கட்டி பறக்கின்றன.

click me!